நுழைவுத் தேர்வு இல்லாமல்: மாணவர்களுக்கு தேர்வு எழுத ஐகோர்ட் அனுமதி
நுழைவுத் தேர்வு எழுதாமல் எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களை, செமஸ்டர் தேர்வு எழுத சென்னை ஐகோர்ட் அனுமதித்துள்ளது. இவர்களின் தேர்வு முடிவை நிறுத்தி வைக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன் பாளையத்தில் உள்ள ஜே.கே.கே., முனிராஜா கல்லூரியின் முதல்வர் தாக்கல் செய்த மனு:தொழிற் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்து விட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் தமிழக அரசின் கொள்கை முடிவின்படி, நுழைவுத் தேர்வு எழுதாத மாணவர்கள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., வகுப்புகளிலும் சேர்க்கப்பட்டனர். இவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.எங்கள் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கு 30 இடங்கள் உள்ளன. ஆனால், நுழைவுத் தேர்வு மூலம் மூன்று மாணவர்களை மட்டுமே அரசு அனுப்பியது. மீதியுள்ள இடங்களுக்கு மாணவர்களை அனுப்ப முடியவில்லை. எனவே, விடுபட்ட இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், இவர்களின் சேர்க்கைக்கு தொழில் கல்வி இயக்குனரகம் ஒப்புதல் அளிக்கவில்லை.நுழைவுத் தேர்வு மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்யாததால், 21 மாணவர்களுக்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களையே அரசால் நிரப்ப முடியவில்லை. அப்படியிருக்கும் போது, நுழைவுத் தேர்வு எழுதவில்லை என்பதற்காக இந்த மாணவர்களின் சேர்க்கையை அரசு நிராகரிக்கக் கூடாது.நுழைவுத் தேர்வு எழுதாமல் எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கப்பட்ட 19 மாணவர்களுக்கும் ஒப்புதல் வழங்க வேண்டும். பல்கலைக்கழக தேர்வை எழுத 19 மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று திருச்சி மாவட்டத்தில் ஜெ.ஜெ., ஸ்கூல் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட், ஹால்மார்க் பிசினஸ் ஸ்கூல் ஆகியவற்றில் எம்.பி.ஏ., வகுப்பில் சேர்க்கப்பட்ட நான்கு மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இம்மனுக்களை நீதிபதி சுகுணா விசாரித்தார். கல்லூரி சார்பில், சீனியர் வக்கீல் கே.துரைசாமி, மாணவர்கள் சார்பில் வக்கீல் ஆர்.சுரேஷ்குமார் வாதாடினர். அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் சங்கரன், அண்ணா பல்கலை சார்பில் மணிசுந்தர் கோபால் ஆஜராகினர். நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவில், முதல் செமஸ்டர் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. தேர்வு முடிவை அண்ணா பல்கலை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம். ரிட் மனு மீதான இறுதி உத்தரவின்படி, இந்த அனுமதி அமையும் என கூறப்பட்டுள்ளது. விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதி சுகுணா தள்ளிவைத்துள்ளார்.