கிராண்ட் மாஸ்டர் காரைக்குடி பிரனேஷ் சாதனை படைக்க நிதியின்றி தவிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அழகாபுரி முனிரத்தினம்- மஞ்சுளா மகன் எம்.பிரனேஷ் 16. இவர் புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். கடந்த ஆண்டு டிச., 20 முதல் 23 வரை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடந்த ரில்டன் கோப்பை செஸ் தொடரில் 29 நாடுகளை சேர்ந்த 136 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் விளையாடிய எம்.பிரனேஷ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெறுவதற்கான 2504 புள்ளிகளை பெற்று, நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இவர் இந்தியாவின் 79, தமிழகத்தின் 28 வது கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார். இவர், உலகளவில் சாதனை புரிய 2700 புள்ளிகள் எடுக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் நடக்கும் உலகளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பித்து வருகிறார். ஆனால், இந்த போட்டிகளில் பங்கேற்க நிதியின்றி தவிக்கிறார். நேற்று சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.பிரனேஷின் தந்தை முனிரத்தினம் கூறியதாவது: நான் காரைக்குடியில் தனியார் ஜவுளிக்கடையில் கணக்காளராக உள்ளேன். என் மனைவி சங்கராபுரம் அங்கன்வாடி மைய ஊழியர். எங்கள் வருமானத்தை வைத்து மகனை உலக சாதனை முயற்சிக்காக வெளிநாடு அனுப்புவதில் சிரமமாக உள்ளது. ஒரு நாட்டிற்கு சென்று வர ரூ.2.5 லட்சம் வரை செலவாகும். கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற என் மகனை, அமைச்சர், எம்.பி.,க்கள் பலர் பாராட்டினர். அதே நேரம் தொடர்ந்து உலக சாதனை புரிய நிதியின்றி தவிக்கிறோம். என் மகனின் உலக சாதனைக்கு நிதி உதவி செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்றார்.