செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கீடு உயர் நீதிமன்றம் உத்தரவு
துாத்துக்குடி மாவட்டம், கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு, மத்திய அரசு 2017 - 20 வரை, 22.94 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. தமிழை மத்திய அரசு புறக்கணிப்பதற்கு இது உதாரணம். சமஸ்கிருத வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியது போல, சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ஆண்டுதோறும், 1,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதை மத்திய பல்கலையாக மாற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது.மத்திய அரசு தரப்பில், தமிழ் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தப்படுகிறது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதி உயர்த்தப்படுகிறது. தமிழ் மீது பாரபட்சம் காண்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பிரதமர் மோடி, தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். அவர், தமிழின் தனித்துவம், தொன்மையை உலக மக்களுக்கு முடிந்த வரை எடுத்துரைக்கிறார். தமிழை பாதுகாப்பது, மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளதாக மத்திய அரசு பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. அந்த இலக்கை அடைய மேற்கொண்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் எந்த உறுதியான ஆவணமும் இல்லை. செம்மொழி அந்தஸ்துள்ள ஆறு மொழிகளில் தமிழும் ஒன்று. உலகெங்கிலும் தமிழ் அதிக மக்களால் பேசப்படுகிறது. வரலாறு, பண்பாடு, தனிச்சிறப்பு கொண்டது.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு அதிக மற்றும் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய, நிகர்நிலை பல்கலை சிறப்பு அந்தஸ்து வழங்க மனுவை பரிசீலித்து மத்திய, மாநில அரசுகள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், பணி நியமனம் தொடர்பாக வழக்கு எதுவும் இல்லாத பணியிடங்களுக்கு, விரைவில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து, மத்திய, மாநில அரசுகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.