திருத்தணி வட்டார கல்வி அலுவலகம் புதிய கட்டடம் அமைவதில் இழுபறி
திருத்தணி: திருத்தணி பழைய தர்மராஜா கோவில் அருகே வட்டார கல்வி அலுவலகம், 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. மாணவர்களுக்கு அரசு வழங்கும் நல திட்ட உதவிகள் வழங்குவது, 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணி பதிவேடுகளும் இந்த அலுவலகம் மூலம் பராமரிக்கின்றன.இந்நிலையில், கல்வி அலுவலக கட்டடம் பழுதடைந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருத்தணி வட்டார கல்வி அலுவலகம் திருத்தணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக கட்டடத்தில் இயங்கி வருகிறது.இதையடுத்து, திருத்தணி வட்டார கல்வி அலுவலர் சலபதி முயற்சியால் பழைய கல்வி அலுவலகம் இயங்கி வந்த அந்த இடத்தை வருவாய் துறையிடம் இருந்து வட்டார கல்வி அலுவலகம் பெயர் மாற்றம் செய்து, புதிய கட்டடம் கட்டுவதற்கு போதிய நிதியுதவி வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் முயற்சி செய்துள்ளார்.ஆனால், அந்த இடத்தை வருவாய் துறையினர் அளந்து கொடுக்காமல், ஆறு மாதமாக நில அளவையாளர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், புதிய வட்டார கல்வி அலுவலகம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து வட்டார கல்வி அலுவலக இடத்தை சர்வே செய்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.