உள்ளூர் செய்திகள்

மருத்துவக் கல்லூரிக்கு பதிலாக மாற்று இடத்தில் ஓட்டு எண்ணும் மையம்

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு பதிலாக வேறு இடத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை கண்டறிந்து தேர்தல் கமிஷன் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் கவுன்சில் தலைவர் ராஜ் முகமது உள்ளிட்ட 6 நிர்வாகிகள் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்.,படிக்கிறோம். இதை சட்டசபை, லோக்சபா தேர்தலின்போது ஓட்டு எண்ணிக்கை மையமாக இந்திய தேர்தல் கமிஷன் பயன்படுத்துகிறது. அங்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்படுகின்றன. அப்போது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அடிக்கடி வளாகத்திற்குள் ஆய்வு செய்வர். தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்வரை 2 முதல் 3 மாதங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.கல்லுாரியின் நிர்வாகப் பிரிவு அலுவலகம், உடற்கூறியல், உடலியங்கியல், உயிர்வேதியியல் துறை வகுப்பறைகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் அங்கு மாணவர்களை அனுமதிப்பதில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கிறது.பாதுகாப்பு கெடுபிடிகளால் மாணவர்கள் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கச் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.2024 லோக்சபா தேர்தலின்போது வேறு கல்லுாரிக்கு ஓட்டு எண்ணிக்கை மையத்தை மாற்ற இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர், தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.தேர்தல் கமிஷன் தரப்பு: கடந்த பல ஆண்டுகளில் நடந்த தேர்தலின்போது அங்கு ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை. மாற்று இடம் தேர்வு செய்வது சாத்தியமில்லை.நீதிபதிகள்: ஓட்டு எண்ணும் மையம் அமைக்க டீன் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாக ஆவணங்களில் உள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: மாற்று இடம் தேர்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை கண்டறிந்து தேர்தல் கமிஷன் தரப்பில் பிப்.,8 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்