குன்னுார் அருகே டைடல் பார்க் சுற்றுலா துறை அமைச்சர் தகவல்
ஊட்டி: குன்னுார் அருகே டைடல் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்த அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்ற சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு பல்வேறு சுற்றுலா சார்ந்த திட்டங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.மாவட்டத்தில், 65 சதவீதம் வனப்பகுதி அமைந்துள்ளதால், சுற்றுலாவை மேம்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.அதன்படி, குன்னுார் எடப்பள்ளி அருகே, அரசுக்கு சொந்தமான நிலத்தில், 100 ஏக்கர் பரப்பில், மினி டைடல் பார்க் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இங்கு, டைடல் பார்க் அமைந்தவுடன் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.