மாணவர்களின் உயர்கல்விக்கு மாவட்ட நிர்வாகம் உதவும் கலெக்டர் சங்கீதா உறுதி
மதுரை: மாணவர்களின் உயர்கல்விக்கு கல்விக்கடன் பெற மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என நான் முதல்வன் திட்டத்தை துவக்கி வைத்து கலெக்டர் சங்கீதா பேசினார்.தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் கல்லுாரி படிப்புக்கு வழிகாட்டும் கல்லுாரி கனவு நிகழ்ச்சி நேற்று லேடி டோக் கல்லுாரியில் நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் பேசியதாவது: அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தமிழில் தனித்திறன் பெறவும், ஆங்கிலத்தில் எழுத, சரளமாக பேச, நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் இத்திட்டத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு சட்டம், வேளாண்மை, பொருளாதாரம், பொறியியல், மருத்துவம், அரசியல், நிர்வாகம் என பல உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன.அதில் விருப்பமான துறையை தேர்வு செய்து, முழுத்திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர்கல்வி பெற பொருளாதாரம் தடையாக கூடாது. இதற்காக மாணவர்களுக்கு அதிகளவு கல்விக் கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக விளங்கும் என்றார்.சட்டத்துறையில் வாய்ப்புகள் குறித்து அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் குமரன், வேளாண்துறை வாய்ப்புகள் குறித்து வேளாண் கல்லுாரி முதல்வர் காஞ்சனா மற்றும் கலை, அறிவியல், மருத்துவம், போட்டித் தேர்வுகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் பேசினர்.இதில் 2 ஆயிரம் மாணவர்கள் நேரடியாகவும், அரசு பள்ளிகளின் 93 ஆய்வகங்களில் இணைய வழியில் 3 ஆயிரம் பேரும் பங்கேற்றனர். டி.ஆர்.ஓ., சக்திவேல், ஆர்.டி.ஓ., ஷாலினி, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை உதவி இயக்குனர் செந்தில், கல்லுாரி முதல்வர் கிறிஸ்டினா சிங் கலந்து கொண்டனர்.