பஸ்சில் மாணவிக்கு நெஞ்சு வலி; உயிர் காத்த ஓட்டுனர், நடத்துனர்
தட்சிண கன்னடா: மங்களூரில் கல்லுாரி முடிந்து தனியார் பஸ்சில் வந்த மாணவிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. பஸ் ஓட்டுனர், நடத்துனர் ஆறு நிமிடங்களில் பஸ்சை மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று, மாணவியின் உயிரை காப்பாற்றினர்.கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் கிருஷ்ண பிரசாத் என்ற தனியார் பஸ், மங்கலாதேவி - குஞ்சத்தபைல் இடையே இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல், நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் இந்த ரூட்டில் பஸ் சென்று கொண்டிருந்தது.வழியில் உள்ள கூலுாரில் கல்லுாரி முடிந்து, 15 கல்லுாரி மாணவியர் பஸ்சில் ஏறினர். பஸ்சில் ஏறிய சிறிது நேரத்தில், ஒரு மாணவிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை பார்த்து, தோழியர் பதற்றம் அடைந்தனர்.நடத்துனர் மகேஷ் பூஜாரி சுரேஷ், ஓட்டுனர் கஜேந்திர குந்தரிடம் தெரிவித்தார். அவரும் பஸ்சில் ஹாரன் ஒலி எழுப்பியவாறு, 6 கி.மீ., தொலைவில் உள்ள பாதர் முல்லர் மருத்துவமனைக்கு, பஸ்சை ஆறு நிமிடங்களில் அதிவேகமாக ஓட்டிச் சென்றார்.மருத்துவமனை வளாகத்துக்குள் நேராக நுழைந்து, நுழைவாயிலில் பஸ்சை நிறுத்தினார். ஸ்ட்ரெச்சருக்கு காத்திருக்காமல், பஸ்சில் இருந்து அம்மாணவியை நடத்துனர், மருத்துவமனை செக்யூரிட்டிகள், கைகளில் துாக்கி சென்று, அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.அவருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. உரிய நேரத்தில் மாணவியை கொண்டு வந்ததால், சிகிச்சையில் அம்மாணவி உயிர் பிழைத்தார். அதிவேகமாக மருத்துவமனையில் சேர்த்து, மாணவியின் உயிரை காப்பாற்றிய பஸ் ஓட்டுனர், நடத்துனரின் செயலை, பயணியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பாராட்டுகளை பெற்று வருகிறது.