போதை பொருட்கள் விற்பனையை கூட்டாய்வு செய்து தடுக்க அறிவுரை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து தடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் கொண்டு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களோடு இணைந்து, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை நிலவரம் குறித்து, கூட்டாக ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.கூட்டத்தில் எஸ்.பி., தீபக் சிவாச், டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, கலால் உதவி ஆணையர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உள்ளிட்ட துறை சார்ந்த முக்கிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.