கல்வியில் புரட்சி செய்தது ஏ.ஏ.பி.,தான்! முதல்வர் ஆதிஷி சிங் பெருமிதம்
புதுடில்லி: டில்லியில் ஆம் ஆத்மி அரசின் கல்விப் புரட்சியால், கல்வி முறையையே மாற்றி அமைத்துள்ளோம். குழந்தைகளுக்கு இப்போது வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை என டில்லி முதல்வர்ஆதிஷி சிங் பேசினார்.ஜில்மில் காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர் ஆதிஷி சிங் பேசியதாவது:இந்தப் புதிய கட்டடத்தைப் பார்த்து குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படுகிறது.புதிதாகத் திறக்கப்பட்ட தொகுதியில் 45 அறைகள், 25 வகுப்பறைகள் மற்றும் மூன்று இந்தக் கட்டடத்தில், அதிநவீன நுண்ணோக்கிகள் உட்பட நவீன கருவிகள் பொருத்தப்பட்ட ஆறு மேம்பட்ட ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றால், உயிரியல் உள்ளிட்ட பாடங்களை இன்னும் முழுமையாகப் படிக்கவும், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் மேம்பட்ட கல்வியைப் பெறவும் முடியும்.பள்ளிக்குள் நுழைந்ததும் மாணவர்களின் முகத்தில் உற்சாகத்தைக் கண்டேன். இந்தப் புதிய கட்டடம் அவர்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும்.பழைய கட்டடத்தில், மழைக்காலங்களில் வகுப்பறை மற்றும் மைதானம் ஆகியவற்றில் மழைநீர் தேங்கும். அதனால், விடுமுறை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது. மேலும், நவீன ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டு மைதானம் எல்லாம் அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கு வெறும் கனவாகவே இருந்தது. ஆனால், ஆம் ஆத்மி அரசு அமைந்த பிறகுதான் கல்வித் துறையில் புரட்சி ஏற்பட்டது. சர்வதேச தரத்தில் கல்வி வழங்குவதோடு மட்டுமின்றி, பள்ளிகளிலும் நவீன கருவிகளுடன் கட்டடங்கள் கட்டப்பட்டனஇவ்வாறு அவர் பேசினார்.டில்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் பேசும்போது, கடந்த காலத்தில் மாணவர்கள் எதிர்கொண்ட சவால்களை எல்லாம் ஆம் ஆத்மி அரசு தகர்த்து, அரசுப் பள்ளிகளில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ல் நான் எம்.எல்.ஏ., ஆனபோது, அரசுப் பள்ளிகளில் பிளஸ்2 தேர்ச்சி 60 சதவீதமாக இருந்தது. அதுவே இன்று, 95 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, ஸ்டார்ட்அப் வாயிலாக பல புதுமைகளையும் செய்துள்ளனர், என்றார்.