சி.பி.எஸ்.இ., தேர்வுகளில் மாணவர்கள் அபாரம் அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
புதுச்சேரி: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் முதல் முறையாக பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். பிளஸ் 2 தேர்வில் 90.39 சதவீதமும், 10ம் வகுப்பில் 88.66 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் 9 அரசு பள்ளிகளும், 10ம் வகுப்பில் 42 அரசு பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டதை பின்பற்றி நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் பொது தேர்விலேயே அதிகப்படியான தேர்ச்சி சதவீதத்தை எடுக்க உதவிய கல்வித்துறை செயலர், இயக்குனநர், அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் தளர்ந்து விடாமல், தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகள் என்பதை உணர்ந்து விரைவில் நடக்கும் மறு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று தர வேண்டும்.மத்திய அரசின் பாடத்திட்டங்களை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு புதுச்சேரி மாநில மாணவர்கள், பெற்றோர்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.