உள்ளூர் செய்திகள்

பல்கலை ஆசிரியர்கள் இடமாற்றம் விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை: அண்ணாமலை பல்கலையில் முறைகேடாக நியமனம் பெற்ற ஆசிரியர்களை வேறு கல்லுாரிகளுக்கு மாற்றியது குறித்து விசாரணை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.நெட்/ஸ்லெட் சங்க பொதுச் செயலாளர் தங்க முனியாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு:முதுகலை பட்டதாரியான நான், பிஎச்.டி.,முடித்து, தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சியடைந்துள்ளேன். உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளேன். முறைகேடு புகார் எழுந்ததால், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது. அங்கு 860 ஆசிரியர் பணியிடங்கள் இருந்தால் போதும் என்ற நிலையில், 3896 பேர் வரை நியமிக்கப்பட்டிருந்தனர். உபரியாக இருந்தவர்களில் 370 பேர் பல்வேறு கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு உதவி பேராசிரியர்களாக 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மாறுதல் செய்யப்பட்டனர். 2019ல் மேலும் 87 பேர் பல கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர். ஏற்கனவே மாறுதல் செய்யப்பட்ட பலரின் ஒப்பந்த காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.இதனால், என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது. நியமன முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடக்கிறது. முறைகேடாக நியமிக்கப்பட்டவர்களை காப்பாற்றும், வகையில் இதர கல்லுாரிகளுக்கு மாற்றுகின்றனர். இவர்களில் பலருக்கு போதிய கல்வித் தகுதி இல்லை.பல்கலை உபரி ஆசிரியர்களை இதர கல்லுாரிகளுக்கு மாறுதல் செய்யும் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். முறைகேடாக நியமனம் பெற்றவர்களை வேறு கல்லுாரிகளுக்கு மாற்றியது மற்றும் ஒப்பந்த காலத்தை நீட்டித்தது குறித்து நிர்வாக சீர்திருத்தத்துறை கமிஷனர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: இது பணியாளர் சம்பந்தப்பட்ட வழக்கு. சங்கம் சார்பில் பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் மனுதாக்கல் செய்து நிவாரணம் தேடலாம். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்