துவக்க கல்வியில் இடைநிற்றல் இல்லை துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
சென்னை: பள்ளி கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக, மலைப்பகுதியில் காலிப் பணியிடங்கள் இல்லையென சொல்லும் அளவிற்கு, இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தி சாதனை படைத்துள்ளோம், என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.அத்துடன், மாணவர்களின் மொழித்திறன் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்துவதற்காக, 'திறன்' இயக்கத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள்; மாணவர்களின் கணினிசார் அடிப்படை அறிவியல், செயற்கை நுண்ணறிவு திறன் மற்றும் அதை பயன்படுத்தும் நுட்ப அறிவியலை கற்பிக்கும், 'டி.என்., ஸ்பார்க்' என்ற புதிய பாடத் திட்டத்திற்கான பாடநுால் போன்றவற்றையும் வெளியிட்டார்.அதன்பின், உதயநிதி பேசியதாவது:மாணவர்களுக்கு அகரம் சொல்லி தருவது முதல், எதிர்காலத்தில் அவர்கள் படிக்கும் உயர் கல்விக்கு அடித்தளம் இடுவது வரை எல்லாமே, துவக்க கல்வி ஆசிரியர்கள் தான். உங்களிடம் இருந்து மாணவர்கள், கல்வி மட்டுமின்றி உலகையும் கற்க உள்ளனர்.பள்ளி கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக, மலைப்பகுதியில் காலிப் பணியிடங்களே இல்லையென சொல்லும் அளவிற்கு, இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தி சாதனை படைத்துள்ளோம்.மேலும், துவக்க கல்வியில் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. இதை, மத்திய அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் திட்டங்களை, முதல்வர் செலவாக பார்க்கவில்லை; எதிர்காலத்தின் மீதான முதலீடாக பார்க்கிறார்.அதனால் தான், மத்திய அரசு கல்விக்கான நிதியை தராமல், நிதிச்சுமை ஏற்படுத்தினாலும், ஆசிரியர்கள், மாணவர்களை பாதிக்காத வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவர்களை படிக்க சொல்வதை போல், விளையாடவும் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிரமணியன், மகேஷ், மேயர் பிரியா, பள்ளி கல்வித்துறை செயலர் சந்திரமோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.