கல்வி உரிமைச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க கால நீட்டிப்பு
சென்னை: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் வரைவு விதிகள் தொடர்பாக ஆலோசனை மற்றும் கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசம், வரும் ஜனவரி 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் வரைவு விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் பார்வைக்காக, ( www.pallikalvi.in , www.tn.gov.in/schooleducation ) ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை, இம்மாதம் 20ம் தேதிக்குள் இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி), பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-600 006 என்ற முகவரிக்கு அஞ்சல் அல்லது ( jdhssed@nic.in ) என்ற இ-மெயில் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டிக்குமாறு, பல்வேறு தொண்டு நிறுவனங்களிடமிருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து, 2011ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி வரை, ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.