உயர் கல்வியில் வளர்ச்சியை எட்ட தனியார் துறை உதவி அவசியம்
சென்னை: ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் ‘ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசு’ வழங்கும் விழா சென்னையில் நடந்தது. விழாவில் ஏற்புரையாற்றி தமிழ்மொழி மேம்பாட்டு வாரியத் தலைவர் வா.செ. குழந்தைசாமி பேசியதாவது: ராஜா சர் முத்தையா செட்டியார் வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்வுக்கு சொந்தக்காரர். தனது 24வது வயதில் சென்னை மாநகராட்சி உறுப்பினராகி, 28வது வயதில் சென்னை மாநகராட்சியின் முதன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எந்த ஒரு பொறுப்பும் தனி நபருடைய நீண்ட கால ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விடக்கூடாது என்ற உயர்ந்த தொலைநோக்குடன் இப்பதவியில் சுழற்சி முறையை புகுத்தியவர். கடந்த 1926ம் ஆண்டு நாடு முழுவதும் 13 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருந்த நிலையில், 14வது பல்கலையாக அண்ணாமலை பல்கலை துவங்கப்பட்டது. நாட்டில் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்ட தனியார் பல்கலைக் கழகம் இதுதான். நாட்டின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தில் வாரணாசி பல்கலையும், இரண்டாம் இடத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலையும் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் தனியார் துறையில் அமைந்த அண்ணாமலைப் பல்கலை உள்ளது. தான் ஆரம்பித்த பல்கலையில் உ.வே.சாமிநாத ஐயர், சாமிநாதன், நீலகண்ட சாஸ்திரி என திறமை வாய்ந்த ஆசிரியர்களை தேடிப் பிடித்து பதவியில் அமர்த்தினார். இதன் மூலம், ஒரு தனியார் பல்கலைக் கழகத்தை எப்படி அமைக்க வேண்டும் என்பதை ஒரு பாடமாக உணர்த்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில், நாடு சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. எதிர்கால வளர்ச்சிக்கு இயற்கை வளம், நிதி பற்றாக்குறை ஆகியவை தடையாக இருக்காது. பயிற்சி பெற்ற நிபுணர்கள் தேவையான அளவு இருப்பார்களா என்பதே தடையாக இருக்கும். கடந்த 1850ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டு வரையிலான 110 ஆண்டு காலத்தில், 34 முன்னேறிய நாடுகளின் வளர்ச்சி குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் மக்கள் எழுத்தறிவு பெற்ற பிறகுதான் அந்த நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேறத் துவங்கியுள்ளது தெரியவந்தது. கடந்த 1979ம் ஆண்டில் சீனாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 70 சதவீதம் பேர். நம் நாட்டில் வெறும் 43 சதவீதம் தான். அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேற சீனர்கள் அளவிற்கு நம் மக்கள் தயாராக இல்லை. கடந்த 1981ல் நம் நாட்டில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எண்ணிக்கை 30 கோடி;1991ல் இது 32 கோடியாக உயர்ந்துள்ளது. 2001ம் ஆண்டில் நம் நாட்டில் கல்வியறிவு பெற்றவர்கள் 65 சதவீதம் பேர். இதே ஆண்டில் சீனாவில் 90 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். நாம் எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்னையாக இது இருந்து வருகிறது. நம் நாட்டில் அமைப்புச் சாரா தொழில்களில் 91 சதவீதம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 5 சதவீதம் பேர் தான் முறையாக பயிற்சிப் பெற்றவர்கள். மற்றவர்கள் எல்லாம் எந்தப் பயிற்சியும் இல்லாது பணிபுரிபவர்கள். உயர்க்கல்வி இல்லாது, பள்ளிக் கல்வியோடு ஏதாவது ஒரு பணியைச் செய்வதற்கு சீனாவில் ஐந்து லட்சம் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. நம் நாட்டில் 15 ஆயிரம் பயிற்சி நிறுவனங்கள் தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசின் சார்பிலும், தனியாரின் சார்பிலும் ஏராளமான தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உருவாக வேண்டும். நம் நாட்டில் 17 வயது முடித்தவர்களில் 10 சதவீதம் பேர் தான் உயர்க்கல்விக்குச் செல்கின்றனர். 2015ம் ஆண்டுக்குள் 15 சதவீதம் பேராவது உயர்க்கல்வி பெற வேண்டும். அதற்குக் குறைந்தது ஆயிரத்து 500 பல்கலையாவது வேண்டும். இந்த அளவுக்குப் பல்கலைகளை உருவாக்குவதற்கு மூன்று வகையான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் புதிய பல்கலைகளை துவங்குவதோடு, தனியார் துறையில் புதிய பல்கலைகளை உருவாக்க வேண்டும். தனியார் துறையின் உதவியும், ஈடுபாடும் இல்லாமல் உயர்க்கல்வியில் வளர்ச்சி ஏற்படாது. தனியார் துறையில் தவறுகள் இருந்தால் அதைத் திருத்த வேண்டுமே தவிர, அதை முழுமையாக எதிர்க்கக் கூடாது. உயர்க்கல்வியில் வளர்ச்சிப் பெற தனியார் துறையை அதில் ஈடுபடச் செய்ய வற்புறுத்துவதும், அதற்கு ஆதரவு தருவதும் அரசின் கடமையாகும்.நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் அதற்கென பெருந்தொகையைச் செலவு செய்கின்றனர். அமெரிக்காவில் தங்கி படிக்கும் ஆறு லட்சம் வெளிநாட்டு மாணவர்களால் அந்நாடு 70 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பெறுகிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று படிக்கும் 84 ஆயிரம் மாணவர்களால் 12 ஆயிரம் கோடி ரூபாய் அந்த நாட்டிற்கு வருமானம் கிடைத்து வருகிறது. நமது தனியார் பல்கலைக்கழகங்கள் இவர்களில் பாதிப்பேருக்காவது இத்தகைய கல்வியை நம் நாட்டிலேயே கொடுத்தால் அதற்குக் கட்டணம் அதிகமாக இருந்தாலும் வரவேற்கத்தான் வேண்டும். 1947ம் ஆண்டுக்கு முன் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர்களும், சிறைச் சென்றவர்களும் தேசபக்தர்கள் என்று கருதப்பட்டார்கள். நாட்டின் இன்றைய சூழலில் நல்ல முறையில் யார் கல்வி கொடுக்கிறார்களோ, அவர்கள் தான் தேசபக்தர்கள். இத்தகைய தேசபக்திக்குக் காள்கோள் நாட்டியவர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார். இவ்வாறு வா.செ.குழந்தைசாமி பேசினார்.