உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கை தேதி நீட்டிக்க கோரி வழக்கு

சென்னை: தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை மீண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கிறது. சுயநிதி ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் முனுசாமி என்பவர் தாக்கல் செய்த மனு:ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க ஜூலை 31ம் தேதி, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க ஆகஸ்ட் 31ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மாதம் 14ம் தேதி கவுன்சிலிங் துவங்கியது. 31ம் தேதி வரை முடியவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனர் ஓர் உத்தரவை பிறப்பித்தார். அதில், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் ஜூலை 31ம் தேதிக்குள் மாணவர்களை சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை முடிந்த பின்னரே நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் சேர மாணவர்கள் விரும்புவர். ஒற்றைச்சாளர முறை சேர்க்கை முடிந்த பின்பு தான், எத்தனை காலியிடங்கள் உருவாகும் என, நிர்வாகத்தால் கணிக்க முடியும். ஆனால், ஜூலை 31ம் தேதி வரை அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். எனவே, ஜூலை 31ம் தேதிக்குள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழான இடங்களை நிரப்ப முடியாது. நிர்வாக ஒதுக்கீட்டில் ஜூலை 31ம் தேதிக்குள் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்கிற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க போதுமான கால அவகாசத்தை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி குலசேகரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் ஆஜரானார். மனுவுக்கு பதிலளிக்குமாறு அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்