உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பத்தில் அரசு பள்ளிகளுக்கு இரண்டடுக்கில் கூலிங் ஷீட்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டத்தில், செயல்பட்டு வரும், பழமையான அரசு பள்ளி கட்டடங்களை இடித்து அகற்றாமல், புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக,பழமையான பள்ளிகளில், இரண்டடுக்கு தகர கூரையில், வெப்ப தாக்குதலை தடுக்கும் வகையில், போம் இன்சுலேட்டர் என்ற நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலை என 1,335 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, அம்பத்துார் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில், செயல்பட்டு வரும் இப்பள்ளிகளில் பெரும்பாலானவை, பழமை வாய்ந்தவையாக உள்ளன.சில இடங்களில், 50க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்த, பழமை வாய்ந்த கட்டடங்களில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. முறையான பராமரிப்பு இன்மை காரணமாக, இந்த கட்டடங்கள் பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. பழமையான கட்டடங்களில் செயல்பட்டு வரும் பள்ளி கட்டடங்கள் வலுவாகவும், கூரை, மங்களூர் ஓடு வேயப்பட்டதாகவும் உள்ளது.கட்டடம் வலுவாக இருந்தாலும், கூரை ஓடுகள் உடைந்து மழைநீர் உட்புகுவதால் மாணவர்கள் அவதிப்படும் நிலை உள்ளன. அவ்வப்போது உடையும் ஓடுகளை தொடர்ந்து சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தவறும்பட்சத்தில், மழை காலத்தில் மாணவர்கள், அவதிப்பட்டு வருகின்றனர்.பழமையான இந்த கட்டடங்களின் சுவர்கள், ஒன்றரை அடி அகல சுவர் மற்றும் வலுவான துாண்களுடன் கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில், கருங்கல் சுவர் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அவற்றின் உறுதித்தன்மை வலுவாக இருப்பினும், மங்களூர் ஓடுகள் கிடைக்காததால், அவற்றை புதுப்பிக்க இயலாமல், பாழடைந்து காட்சியளிக்கிறது.இந்த நிலையில், சிறந்த உறுதித்தன்மை கொண்ட பழமையான கட்டடங்களில், அவற்றை முழுதும் இடித்து அகற்றாமல், நவீன தொழில்நுட்பத்தில், எளிமையான முறையில் அவற்றை புனரமைப்பு செய்துள்ளனர்.இரும்பு தகரத்தில் மேற்கூரை அமைத்தால், வகுப்பறையில் வெயில் காலத்தில் ஏற்படும் வெப்பத்தால், மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதை கருத்தில் கொண்டு, வெப்ப தாக்கத்தை தடுக்கும் வகையில், இரண்டடுக்கு தகர கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதன்படி, முதல்கட்டமாக, பள்ளிப்பட்டு ஒன்றியத்தில், கொத்துார், டி.வி.கண்டிகை, கீச்சலம் உள்ளிட்ட ஐந்து அரசு தொடக்க பள்ளிகளில், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் தலா 4.18 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன தொழில் நுட்பத்தில் கூரை அமைக்கப்பட்டுள்ளது.இரண்டு தகர கூரைகளுக்கு நடுவில், வெப்ப தடுப்புக்காக, போம் இன்சுலேட்டர் என்ற நவீன தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட்டது. இதன்காரணமாக, பழமை வாய்ந்த கட்டடத்தில், புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட கூரையில், மாணவர்கள், வெயில், மழை என எந்தவித பாதிப்பும் இன்றி நிம்மதியாக படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:மங்களூர் ஓடு வேயப்பட்ட பழைய வகுப்பறை கட்டடங்களை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்டுப்பட்டால், கோடிக்கணக்கில் பணம் தேவைப்படும். தற்போது, மாவட்டத்தில் உள்ள பழைய கட்டடங்களின் அடித்தளம் மற்றும் சுவர் பலமாக இருப்பதால், கூரை சேதாரத்தை மட்டும், குறைந்த நிதியில், சீரமைக்க இந்த தொழில்நுட்பம் உதவியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்