வாசிப்பை சுவாசிக்கலாம் வாங்க நாளை புத்தக திருவிழா துவக்கம்
திருப்பூர்: திருப்பூரில், நாளை புத்தக கண்காட்சி துவங்கி, 10 நாள் நடக்கிறது.தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து, 20வது திருப்பூர் புத்தக திருவிழா நடத்துகின்றன. காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் வளாகத்தில், நாளை, (25ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், தலைமை வகித்து, புத்தக திருவிழாவை துவக்கி வைக்கவுள்ளார்.தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். அடுத்த மாதம், 4ம் தேதி வரை, தினமும் காலை, 11:00 முதல், இரவு, 9:00 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில், கருத்தரங்கு, உரையாடல், கலை நிகழ்ச்சி என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொல்லியல் துறை ஆய்வாளர் என, பலரும் பங்கேற்று பேசுகின்றனர்.அச்சோவிய போட்டிபுத்தக திருவிழாவை முன்னிட்டு, வரும், 28ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, பள்ளி மாணவ, மாணவியருக்கான அச்சோவியம் வரைதல் போட்டி நடத்தப்பட இருக்கிறது. கை அச்சு அல்லது கை ரேகை வைத்து ஓவியம் வரையலாம். காய்கறி, பழம் மற்றும் இலைகள் மூலமும், அச்சு வைத்து வரையலாம்.ஓவியம் வரை சார்ட் வழங்கப்படும். தேவையான, கலரிங், பேட் ஆகியவற்றை பங்கேற்பாளர்கள் அவசியம் எடுத்து வர வேண்டும். மேற்கொண்டு விபரம் தேவைப்படுவோர், 90434 64007, 95665 85488 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, புத்தக திருவிழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.