தமிழ் பத்திரிகைகளை தொடர்ந்து படியுங்கள்; கர்நாடக தமிழர்களுக்கு அழைப்பு
பெங்களூரு: கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் நாள் விழாவில் சிறப்புரை ஆற்றியவர்கள், தமிழ் பத்திரிகைகளை தொடர்ந்து படித்து, ஊக்குவிக்க வேண்டும் என, கர்நாடக வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் நாள் விழா, பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள விவசாய தொழில்நுட்ப மையத்தில் நேற்று நடந்தது. கவிஞர் பாபு சசிதரன் தலைமையில், தலைப்பு செய்திகள் என்ற தலைப்பில் சிறப்பு கவியரங்கம் நடந்தது.சமூக செய்திகள் தலைப்பில், கார்த்தியாயினி; விளையாட்டு செய்திகள் தலைப்பில், கல்யாண்குமார்; அறிவியல் செய்திகள் தலைப்பில், தேன்மொழி; குடும்ப செய்திகள் தலைப்பில், மதியழகன்; திரை செய்திகள் தலைப்பில் சுவார்யா; அரசியல் செய்திகள் தலைப்பில் குணவேந்தன் ஆகியார் கவிதைகள் வாசித்தனர்.பின், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் நாளை ஒட்டி, மூத்த பத்திரிகையாளர்களுக்கு கர்நாடக தமிழ் இதழியல் சாதனையாளர் விருதுகளை, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜெயராம் வழங்கி, சிறப்புரை ஆற்றினார். அன்வயா அறக்கட்டளை நிறுவனர் சம்பத் ராமானுஜம் சிறப்புரை ஆற்றினார்.ஸ்ரீராமபுரம் டெக்கான் கல்வி குழுமத்தின் செயலர் ஆண்டாள் கிள்ளிவளவன்; கர்நாடக கவர்னரின் புகைப்பட கலைஞர் ஆண்டனி ஆஞ்சி; தங்கவயல் சிவராஜ்; புலவர் இளங்கோவன் உட்பட பத்து பேருக்கு விருது வழங்கப்பட்டது.சிறப்புரை ஆற்றியவர்கள், தமிழ் பத்திரிகைகளை தொடர்ந்து படித்து, ஊக்கு விக்க வேண்டும் என்று கர்நாடக வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தனர். பெங்., தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.டெக்கான் கல்வி குழுமத்தின் தலைவர் கிள்ளிவளவன், மாநில தி.மு.க., பொருளாளர் தட்சிணா மூர்த்தி, பெங்., தமிழ் சங்க முன்னாள் துணை செயலர் அமுத பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.