உள்ளூர் செய்திகள்

சம்பளமும் இல்லை: தீர்வும் கிடைக்கல பல்கலை அலுவலர்கள் தவிப்பு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட சம்பள மறுநிர்ணய நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அலுவலர்கள் 6 மாதங்களாக சம்பளமின்றி தவிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.பல்கலை விதிப்படி 2018க்கு முன் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு சம்பள மறுநிர்ணயம் மேற்கொள்ள உயர்கல்வி அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேநேரம் 2018க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு சம்பள மறுநிர்ணய முறையை பின்பற்றலாம். அதற்கு முன் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என சிண்டிகேட், செனட் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனாலும் உயர்கல்வி அதிகாரிகளின் அழுத்தத்தால் முன்னாள் துணைவேந்தர் குமார் 216க்கும் மேற்பட்டோருக்கு சம்பள மறுநிர்ணயம் செய்தார். இதில் பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து சாதகமான உத்தரவுகள் பெற்றனர். ஆனாலும் சிலருக்கு 6 மாதங்களாக பல்கலை சம்பளம் வழங்கவில்லை. பலருக்கு சம்பளம் குறைப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதில் தீர்வு கிடைக்காமல் பலர் பாதித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட அவர்கள் கூறுகையில், சம்பள பிரச்னை குறித்து தற்போதைய பல்கலை கன்வீனர் கமிட்டி உறுப்பினர்கள் மயில்வாகனன், தவமணி கிறிஸ்டோபர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்