முட்டை சாப்பிடும் மாணவர்கள் மீண்டும் கணக்கெடுப்பு நடத்த உத்தரவு
திண்டுக்கல்: மாணவர்கள் அனைவரும் முட்டை சாப்பிடுவதாக அறிவிக்கப்பட்ட மதுரை, திண்டுக்கல் உட்பட 16 மாவட்டங்களில், மாணவர்கள் யாரேனும் முட்டை சாப்பிடாமல் இருக்கிறார்களா என்று, முழுமையாக ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இரண்டு வயது முதல் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு வாரத்தில் திங்கள், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், காஞ்சிபுரம், நாகபட்டினம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள பள்ளிக் குழந்தைகள் முழுமையாக முட்டை சாப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டை சாப்பிடுவதாக அறிவிக்கப்பட்ட 16 மாவட்டங்களில் குழந்தைகள் யாராவது முட்டை சாப்பிட மறுப்பு தெரிவிக்கிறார்களா என்று முழுமையான கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய பி.டி.ஓ.,க்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. முட்டைக்கு பதிலாக வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தால் செலவு குறையும் என்பதால், இந்த கணக்கெடுப்பை நடத்த அரசு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.