உள்ளூர் செய்திகள்

ரத்தப்பாறை குகை ஓவியங்களை புதுச்சேரி பல்கலை., மாணவர்கள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த கீழ்வாலை கிராமத்தில் மலை குன்றுகளில் தமிழக அரசு தொல்லியல் துறை மூலம் பாதுகாத்து வரும் பெரிய கற்கால, ரத்தப்பாறை என அழைக்கப்படும் மூன்று குன்றுகளில் நான்கு இடங்களில்  குகை ஓவியங்கள் உள்ளன. இவை வெளி நாட்டு குகை ஓவியங்களை ஒப்பிடும் வகையில்  கி.மு., 1000 முதல் கி.மு., 500 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த மனிதர்களின் அடையாள சின்னமாக திகழ்கின்றன. அவற்றில் விலங்கின அலகு கொண்ட மனிதன், கதிரவன், ஆயுதம், நடன நிகழ்வுகள், குறி ஈடுகள், குதிரை உருவம் உள்ளிட்ட ஓவியங்களில் இருந்து பறவை முகம் கொண்ட மனித உருவங்கள் மற்றும் 11 குறுக்கு கோடுகளை வரலாற்று சின்னமாக கண்டெடுத்து பாதுகாத்து வருவதாக அகழ்வாராய்ச்சியாளர் மகாதேவன் அறிக்கை கூறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வந்ததால் மேலை நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் இதனை கண்டுவந்தனர்.  கடந்த மூன்று ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததாலும் தகுந்த பாதுகாப்பு மற்றும் ஓவியங்களை பார்க்க செல்ல சரியான பாதை இல்லாததாலும் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை புதுச்சேரி பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல் துறை பிரிவு படிக்கும் மாணவ, மாணவிகள் 25 பேர் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜன் மற்றும் தொல்லியல் துறையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் முனைவர் சந்திரமவுலி ஆகியோர் தலைமையில் வந்த மாணவர்கள் ரத்தப்பாறை குகை ஓவியங்களை ஆய்வு செய்தனர். மேலும் யுக காலத்தில் மனிதன் வாழ்ந்ததற்கான அடையாள சின்னமாக விளங்கும் உடைந்து காணப்படும் முதுமக்கள் தாழிகளை பேராசிரியர் ராஜன் மாணவர்களுக்கு எடுத்து காட்டி விளக்கமளித்தார். பின்னர் உடையாநத்தம் கிராமத்தில் யுக காலத்தில் குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் இடத்தையும், அங்கே ஒரே கல்லால் ஆன விசிறி பாறையையும் மாணவர்கள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்