சமச்சீர் கல்வி பாடப் புத்தக விநியோகத்தில் தாமதம்
மதுரை: சமச்சீர் கல்வியில் சில பாடப் புத்தகங்கள் வராத நிலையில், அரைகுறையாக வினியோகிக்கப் பட்டுள்ளது. புத்தக வினியோகத்தை உடனே துவங்கிய அரசு, ஆக.16ம் தேதி மாணவர்களிடம் புத்தகங்கள் இருக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக புத்தகங்கள் பெற்றுச் செல்லப்படுகின்றன. ஒரு சில புத்தகங்கள் இன்னும் வரவில்லை. மெட்ரிக் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 11 முதல் (ஆங்கில வழி) புத்தக வினியோகம் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பள்ளிகள் டி.டி -யுடன் தயாராக இருந்தன. ஆனால் மெட்ரிக் பள்ளிகளுக்கு வினியோகிக்க இன்னும் உத்தரவு வரவில்லை என பாடநூல் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் புத்தகங்களே மாவட்டங்களுக்கு வந்துள்ளன. எனவே, புத்தகங்களை ஆக.15க்கு பின் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக.16ம் தேதிக்குள் மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவது தாமதமாகலாம். சில மாதங்களாக பழைய பாடத்திட்ட புத்தகங்களையே அச்சிட்டு வந்ததால் மெட்ரிக். பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி புத்தகங்கள் முழுமையாக அச்சிட்டு முடிக்கப்படவில்லை. பாக்கியுள்ள புத்தகங்களை தற்போது அச்சிடத் துவங்கி உள்ளனர். பழைய பாடத்திட்டப் புத்தகங்களை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மொத்தம் 13 கோடி புத்தகங்கள் தேவைப்படும். அதில் 7.80 கோடி புத்தகங்கள் வரை அச்சிடப்பட்டுள்ளன.