உள்ளூர் செய்திகள்

இளைஞர்களுக்கு இலவசமாக ஜெர்மனி மொழி போதிக்கும் மகாராஜா

சாங்லி: மகாராஷ்டிராவின் சாங்லி பகுதியில் வசிக்கும் மகாராஜா ஒருவர், இளைஞர்களுக்கு ஜெர்மன் மற்றும் உருது மொழி போதிக்கும் ஆசிரியராக மாறியுள்ளார். எதிர்காலத்தில் ஐரோப்பிய நிறுவனங்களால், இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், இந்தப் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியில் உள்ள நகரம் சாங்லி. மும்பையிலிருந்து 460 கி.மீ., தொலைவில் உள்ள இந்நகரில் ஐந்து லட்சம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதியை முன்னர், பட்வர்த்தன் வம்சத்தை சேர்ந்த மன்னர் குடும்பத்தினர் ஆண்டு வந்தனர். இந்த வம்சத்தின் நான்காவது தலைமுறையில் வந்த மகாராஜா விஜய்சிங்ராவ் மாதவ்ராவ் பட்வர்த்தன். இவர் நடிகை பாக்யஸ்ரீயின் தந்தை. மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த மாதவ்ராவ் பட்வர்த்தன் தற்போது, 6,000த்திற்கும் மேற்பட்ட  இளைஞர்களுக்கு ஜெர்மன் மொழியை போதித்துள்ளார். அந்த மொழி சார்ந்த பணிகளை கையாளும் வகையில், அவர்களை தேர்ச்சி பெற வைத்துள்ளார். ஆசிரியராக மாறிய அவர் கூறியதாவது:சாங்லி நகரில் உள்ள படித்த இளைஞர்கள் எல்லாம் மும்பை, புனே, பெங்களூரு மற்றும் ஐதராபாத்திற்குத்தான் வேலை தேடிச் செல்கின்றனர். இந்த நகரங்களில்தான் கடந்த எட்டு முதல் ஒன்பது ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பி.பி.ஓ.,க்களும் தோன்றியுள்ளன. சாங்லி நகரில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதற்கு காரணம் தகுதிவாய்ந்த இளைஞர்கள் இல்லாமல் இருந்ததே. அதனால், தகுதியான இளைஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். ஒரே வாரத்தில், 14 மணி நேர வகுப்பில், இளைஞர்களை ஜெர்மன் மொழியில் புலமை பெற வைத்து விடுவேன். கட்டணம் எதுவும் வாங்காமல், இந்த ஆசிரியர் சேவையை செய்து வருகிறேன். நகரில் உள்ள கோவிலில் கொட்டகை அமைத்து, மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி பாடங்களை நடத்தி வருகிறேன். 2003ம் ஆண்டு முதல் இதைச் செய்கிறேன். எதிர்காலத்தில் ஜெர்மனிதான் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக உருவாகும். அப்போது ஐரோப்பிய நாடுகளின் சார்பில், இந்தியாவில் ஏராளமான பி.பி.ஓ.,க்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாகும். அதன்மூலம், ஜெர்மன் மொழி பயின்ற ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவர். இவ்வாறு மாதவ்ராவ் பட்வர்த்தன் கூறினார். மும்பை பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் சட்டக்கல்வியில் பட்டம் பெற்ற மாதவ்ராவ், உருது மொழியையும் போதித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்