பார்லிமென்ட்டில் கல்வி உரிமை மசோதா விரைவில் தாக்கல்
இந்தத் திட்டத்தை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் எப்படி நிதி வழங்குவது என்பது தொடர்பாக நிலவி வந்த பிரச்னைக்கு, அமைச்சர்கள் குழு தீர்வு கண்டது. இதையடுத்து, மசோதா பார்லிமென்ட்டில் தாக்கலாக உள்ளது. ‘மசோதாவை தாக்கல் செய்வதில் இனி எந்தப் பிரச்னையும் இல்லை. நிதி வழங்குவது தொடர்பான பிரச்னையில் சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளது’ என, திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறினார். கல்வியை அடிப்படை உரிமையாக்க வகை செய்யும் மசோதாவை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு, அக். 7ம் தேதி ஆய்வு செய்துள்ளது. அப்போது, மசோதா தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கு தீர்வு கண்டது. இதையடுத்து, வரைவு மசோதாவிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து குழந்தைகளையும் கல்வி கற்க வைக்கும் இந்த திட்டத்திற்கு 2008-09ம் ஆண்டு முதல் 2014 -15 ம் ஆண்டு வரை 2.28 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.