எந்த வசதியுமின்றி நடந்தது டாக்டர்களுக்கு நியமன கவுன்சிலிங்
சென்னை: நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் கவுன்சிலிங் நடைபெறும் போதெல்லாம் தள்ளுமுள்ளும் தொடர்ச்சியாக நடக்கிறது. அக். 20ம் தேதி நடந்த டாக்டர் பணி நியமன கவுன்சிலிங்கில், மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் குவிந்ததால், போதிய இட வசதி இல்லாமல் ஒருவருக்கொருவர் முட்டி மோதி அவதிப்பட்டனர். சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில், டாக்டர்களுக்கான இடமாற்ற கவுன்சிலிங் மற்றும் புதிய டாக்டர்கள் பணி நியமன கவுன்சிலிங், நர்சுகளுக்கான கவுன்சிலிங் போன்றவை அடிக்கடி நடைபெறும். முதல் தளத்தில் உள்ள சிறிய கூட்ட அரங்கில் வழக்கமாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கிற்கு வருபவர்களும், அவர்களுடன் துணைக்கு வருபவர்களும் உட்காருவதற்கு எந்தவிதமான வசதிகளும் செய்யப்படுவதில்லை. கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்களை தனியாக அமர வைத்து அழைப்பதும் கிடையாது. யாரை கூப்பிடுகின்றனர் என்றே தெரியாத அளவிற்கு சலசலப்பு இருக்கும். இதனால், ஒருவர் பெயரை அழைத்தாலும் கும்பலாக செல்கின்றனர். படிக்கட்டுகளில் ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டு ஓடுகின்றனர். ஒவ்வொரு முறையும் இந்த சம்பவம் தொடர்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் காலியாக உள்ள 756 டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், கடந்த 15ம் தேதி முதல் நடந்து வருகிறது. பதிவு மூப்பு தேதி 2002 முதல் 2006ம் ஆண்டுக்குள் இருந்ததால், கவுன்சிலிங்கிற்கு வந்த டாக்டர்கள் வயதில் இளையவர்களாகவே இருந்தனர். எம்.பி.பி.எஸ்., படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஓரிரு ஆண்டுகளுக்குள் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. பதிவு மூப்பு அடிப்படையில், வகுப்பு வாரியாக டாக்டர்கள் அழைக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, அன்றே பணி நியமனத்திற்கான உத்தரவுகளும் வழங்கப்பட்டன. கடைசி நாளான அக். 20ம் தேதி ஏராளமான டாக்டர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் குவிந்தனர். கவுன்சிலிங்கிற்கு டாக்டர்கள் பெயரை அழைத்ததும், வழக்கம் போல் எல்லாரும் அடித்துப் பிடித்து ஓடினர். கவுன்சிலிங் மையத்திற்குள் செல்ல வேண்டிய டாக்டர்கள், படிக்கட்டுகளில் கால் கடுக்க நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடன் பெற்றோர், உறவினர்களும் சேர்ந்து கொண்டதால் ஒரே பரபரப்பாக இருந்தது. கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களை மட்டும் ஒருங்கிணைத்து, சலசலப்பின்றி நிகழ்ச்சியை நடத்த துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்யவில்லை. இதுகுறித்து டாக்டர்கள் சிலர் கூறுகையில், ‘கவுன்சிலிங் நேரத்தில் போதிய பணியாளர்களை நியமித்து, கவுன்சிலிங்கிற்கு வருபவர்களை ஒழுங்குபடுத்தி, கவுன்சிலிங் மையத்திற்குள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இந்த பிரச்னை தீராது’ என்றனர். புதிய டாக்டர்கள் ஓராண்டு வரை தற்காலிக நிலையில் பணியாற்றுவர் எனக் கூறப்படுகிறது. கவுன்சிலிங் குறித்த அறிவிப்பில் இது இடம்பெறாவிட்டாலும், ஓர் ஆண்டுக்குப் பிறகே பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பர் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.