உள்ளூர் செய்திகள்

இலவச பஸ் பாஸ் வைத்திருந்த மாணவர்கள் அவமதிப்பு

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள மாகாளிப்பட்டியில் சமேரியா மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, கொட்டப்பட்டி, தெலுங்குப்பட்டி, சின்ன ரெட்டியாப்பட்டி, தோகைமலை, பொத்தமேட்டுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை, அரசு பஸ்கள் நிறுத்தி ஏற்றுவதில்லை. முண்டியடித்து பஸ்சில் ஏறும் மாணவர்களை, கண்டக்டர்கள் தகாத வார்த்தையினால் திட்டுகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு வீட்டுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். குறிப்பாக, தேர்வுகள் நடக்கும் இவ்வேளையில், குறித்த நேரத்தில் பள்ளிக்கும், வீட்டுக்கும் செல்ல முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாணவர்கள், பள்ளியின் முன் நேற்று மாலை, 4.30 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, மணப்பாறை அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ரவி, போலீஸ் எஸ்.ஐ.,க்கள் ராஜசேகர், பரமேஸ்வரி, வி.ஏ.ஓ., நவமணி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "இனிமேல் மாணவர்களை பஸ்கள் நிறுத்தி ஏற்றிச் செல்லும் நடத்துநர்கள் மரியாதையாக பேசுவர்" என்று உறுதியளித்ததின் பேரில், மறியல் கைவிடப்பட்டது. இதனால், மணப்பாறை- குளித்தலை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்