சுய தொழில் துவங்க உதவும் டிப்ளமோ படிப்புகள்
சேலம்: "சுயதொழில் துவங்க உதவும் டிப்ளமோ தொழில்நுட்ப படிப்புகளில், பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை சேர்த்து பயன்பெற வேண்டும்" என, சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை:சுய தொழில்புரிய வாய்ப்புகள் அதிகம் கொண்ட டிப்ளமோ படிப்பை படித்த இளைஞர்கள் திட்டமிட்டு செயல்பட்டால், அனைவரும் தொழில் முனைவோர்களாக உருவாகலாம். மத்திய, மாநில அரசுகள், பல்வேறு சலுகைகளை, மாவட்ட தொழில் மையம் மூலமாக, தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் உள்ளிட்டவற்றை, படித்த சுயதொழில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அளித்து வருகிறது. டிப்ளமோ பயின்ற மாணவ, மாணவியருக்கு, 100 சதவீத வேலைவாய்ப்புகள் உள்ளன. மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. இதைத் தவிர அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய வளர்ச்சியடைந்த நாடுகளை சேர்ந்த பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலைகளை, நம் நாட்டில் துவங்கி வருகின்றன. நம் இளைஞர்களுக்கான வேலைவாய்பபுகளும் அதிகரித்துக் கொண்டுள்ளது. நம் இளைஞர்கள் அயல் நாடுகளுக்கு சென்று பணிபுரியும் நிலை மாறி, நம் நாட்டிலேயே பணியாற்றும் சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. இது போன்ற நிறுவனங்களில் பணிபுரிய நம் மாணவர்கள் தொழில் நுட்ப கல்வி பெற்றிருப்பது அவசியமாகிறது. டிப்ளமோ பயில வயது வரம்பு கிடையாது. குறைவான கல்வி கட்டணம். விலையில்லா மடிக் கணினி, கட்டணச் சலுகையில் பஸ் பாஸ் வசதி, தகுதியான மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, டிப்ளமோ படித்துக் கொண்டு இருக்கும் போதே பல்வேறு சான்றிதழ் படிப்புகள் பயில வாய்ப்பு. டிப்ளமோ பயின்றவர்கள் பி.ஈ., பி.டெக்., சேர இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர இட ஒதுக்கீடு. டிப்ளமோ பயின்றவர்கள் பி.ஈ., பி.டெக்., ஏ.எம்.ஐ.ஈ., போன்ற படிப்புகளை பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ பயின்று தங்களின் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ள முடியும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் நலன் கருதி, பாலிடெக்னிக் பாடப் பிரிவுகளில் சேர்த்து, தங்கள் வளம் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.