சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, முன்னாள் மாணவர் சங்கம், 1891ல் துவக்கப்பட்டது. இச்சங்கம் சார்பில், கல்லூரி வளாகத்தில், இன்றும், நாளையும், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், உலகின் பல்வேறு இடங்களிலிருந்து, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, நண்பர்களுடன் கலந்துரையாட உள்ளனர். நிகழ்ச்சியை, முன்னாள் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் லீலா பொன்னப்பா, மலையாள மனோரமா செயலாட்சி ஆசிரியர் ஜேக்கப் மேத்யூ, சினிமா இயக்குநர் பிரதாப் போத்தன் ஆகியோர், துவக்கி வைக்க உள்ளனர். மா.கம்யூ., பொதுச் செயலர் பிரகாஷ் கராத் உடன், கலந்துரையாடும் நிகழ்ச்சி, கல்லூரி குறித்த போட்டோ கண்காட்சி, விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றுக்கும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, சங்கத் தலைவர் மாம்மென், செயலர் செல்வராஜ், ஆகியோர் செய்து உள்ளனர்.