பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு கடும் போட்டி
பாரதிதாசன் பல்கலையின், முதல் துணைவேந்தராக மணிசுந்தரம், அவரை தொடர்ந்து ஞானம், முத்துக்குமரன், முத்துக்கருப்பன், ஜெகதீசன், முத்தையா மாரியப்பன், தங்கமுத்து, பொன்னவைகோ ஆகியோரை தொடர்ந்து, ஒன்பதாவது, துணைவேந்தராக மீனா, 2010 ஜூலை, 16ம் தேதி, பதவி ஏற்றார். அவரது பதவி காலம் கடந்த, 15ம் தேதியுடன் முடிந்ததை தொடர்ந்து, அவர் பதவியில் இருந்து விடைபெற்றார். துணைவேந்தரின் பதவி காலம் மூன்று ஆண்டுகள். பாரதிதாசன் பல்கலை வரலாற்றில், முத்துகுமரன் மட்டுமே பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு, ஆறு ஆண்டு துணைவேந்தராக இருந்தார். ஓராண்டு வழங்கிய நீட்டிப்பை முத்துக்கருப்பன் ஏற்க மறுத்து பதவி விலகினார். வேறு யாருக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. பல்கலைக்கு அடுத்த துணைவேந்தர் நியமனம் செய்யப்படாததை தொடர்ந்து, தமிழக அரசின் உயர்கல்வி துறையால், நியமனம் செய்யப்பட்ட தமிழக சட்டத்துறை செயலர் ஜெயசந்திரன் தலைமையில், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ராஜகோபால், சுப்பையா ஆகியோர், பல்கலையின் நிர்வாக பொறுப்பை கவனித்து வருகின்றனர். துணைவேந்தர் பதவிக்கு, தகுதியுடைய நபர்களிடமிருந்து, கவர்னர் மாளிகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பல்கலை சார்பில், சிண்டிகேட் உறுப்பினர் பிரேமா, செனட் உறுப்பினர் லோகநாதன் ஆகியோர், துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு குழுக்கான, தமிழக அரசின் பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டவுடன், பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து, மூன்று பேர் கொண்ட பட்டியலை, இக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும். அதில் இருந்து ஒருவரை, துணைவேந்தராக தமிழக அரசு அறிவிக்கும். பாரதிதாசன் பல்கலையில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பதவியை பிடிக்க, பல்கலையில் பணிபுரியும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கடும் முயற்சி செய்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. பல்கலையில் பணிபுரியும் பேராசிரியர்கள் ஆறுமுகம், கிருஷ்ணன், குமாரசாமி, கற்பக குமாரவேல், முன்னாள் பதிவாளர் பொறுப்பு வகித்த ஆறுச்சாமி ஆகியோரது பெயர், துணைவேந்தர் பதவிக்கு முயற்சி செய்பவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, மதுரை காமராஜ் பல்கலை, காரைக்குடி அழகப்பா பல்கலை, சென்னை பல்கலை ஆகியவற்றில் பணிபுரியும் பேராசிரியர்களும், இப்பதவியை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பண பலம், அரசியல் பலம் ஆகியவை உள்ளவர்கள் மட்டுமே, துணைவேந்தர் பதவியை பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகி பல ஆண்டு ஆகிவிட்டது. தற்போதும், இதற்கு, விதிவிலக்கில்லாமல், துணைவேந்தர் பதவியை பிடிக்க, அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், கவர்னர் மாளிகை வட்டாரங்கள் என, அனைத்து மட்டத்திலும், பலரும் காத்திருப்பதாக, பல்கலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில், காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் பதவி காலமும், செப்டம்பர் மாதத்தில் சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் பதவி காலமும் முடிவடைகிறது. இந்த இரு பதவி காலம் முடிந்த பின், ஏற்கனவே காலியாக உள்ள பாரதிதாசன் பல்கலை, தமிழ்நாடு விளையாட்டு பல்கலை ஆகியவற்றுக்கும் சேர்த்து, துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. இன்னும் இரண்டு மாத கால அவகாசம் இருப்பதால், பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பதவியை பிடிக்க முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முன்னாள் துணைவேந்தரான மீனா, மீண்டும் துணைவேந்தர் பதவியை பிடிக்க, பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் பதவி காலம் முடியும் முன், நீட்டிப்பு பெற மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.