அரசியல் பிரமுகர்கள் பிடியில் மருத்துவ கல்லூரி நிலம்
செங்கல்பட்டு: அரசு மருத்துவக் கல்லூரி நிலம், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளதால், மதில் சுவர் அமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில், கல்லூரி, மாணவ, மாணவியர் விடுதி மற்றும் அலுவலகம், ஆகியவை அமைந்துள்ளன. இவ்வளாகம், 240 ஏக்கர் பரப்பளவும், 7 கி.மீ., சுற்றளவும் கொண்டது. துவக்க காலத்தில், இதற்கு அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் தற்போது, பல இடங்களில் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர்கள், சுற்றுச்சுவரை இடித்துவிட்டு, 15 ஏக்கருக்கும் மேலாக, கல்லூரி இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இதனை கண்டு கொள்ளவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட, அரசியல்போர்வையில் உள்ள ரவுடிகள், மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தை, வீட்டு மனைகளாக பிரித்து, பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடங்களை அளந்து, மதில் சுவர் அமைக்க, அரசு 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், மதில் சுவர் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளால் முடியவில்லை. அதைத் தொடர்ந்து, இடத்தை அளந்து கொடுக்குமாறு, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, மருத்துவமனை நிர்வாகம் ஆகியோர், கடந்த 27ம் தேதி, மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான, மேலமையூர், திருமணி ஆகிய பகுதியில் உள்ள இடங்களை அளவீடு செய்தனர். அப்போது, ஒரு சில ரவுடிகள், அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்கள், தங்கள் வீடுகளை காலி செ#யக்கூடாது, என, அ.தி.மு.க., பிரமுகர்களுடன், ஆக்கிரமிப்பாளர்கள், வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க, கடந்த 29ம்தேதி வந்தனர். அப்போது, வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா, "மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான நிலம் என்பதால், மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட வேண்டும். மருத்துவமனை நிலத்தை, அளவீடு செய்து தருமாறு எங்களிடம் மருத்துவமனை நிர்வாகம் முறையிட்டது. அதன்பிறகு நாங்கள் நிலத்தை அளவீடு செய்து கொடுத்துள்ளோம். நீங்கள் ஆக்கிரமிப்பு செய்து, வீடுகள் கட்டியுள்ளது சட்டத்திற்கு புறம்பானது. இதில், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, நீங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம்" என்றார். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு, வேதாசல முதலியார், 300 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினார். இந்த இடத்தை பாதுகாக்க மருத்துவமனை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 50 ஏக்கர் நிலத்தை, அரசியல் பிரமுகர் மற்றும் ரவுடிகள் ஆக்கிரமித்து, விற்பனை செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.