உள்ளூர் செய்திகள்

சான்றிதழில் பாடப்பிரிவின் பெயர் மாற்றம்: மாணவியர் முற்றுகை

திருச்சி: பாடப்பிரிவு பெயரை மாற்றி சான்றிதழ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் கல்லூரியை மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரியில், திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த 183 மாணவிகள் கடந்த 2010ம் ஆண்டு பி.ஏ., இங்கிலிஷ் பாடப்பிரிவில் சேர்ந்து பயின்றனர். மூன்றாண்டு கொண்ட இந்த இளங்கலை பட்டப்படிப்பு இந்த கல்வி ஆண்டுடன் முடிவடைந்தது. கல்லூரி நிர்வாகம் சார்பில், மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழில் பி.ஏ., இங்கிலிஷ் என குறிப்பிட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவிகள் பலர் வேறு கல்லூரிகளில் பி.எட்., மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் சேர்ந்தனர். பாரதிதாசன் பல்கலை சார்பில் வழங்கப்படும் ப்ரொவிஷனல் மற்றும் குமுலேடிவ் மார்க்ஷீட் சமீபத்தில் மாணவிகளுக்கு கிடைத்தது. ஆனால், இந்த சான்றிதழ்களில் பாடப்பிரிவின் பெயர் பி.ஏ., இங்கிலீஷ் என குறிப்பிடாமல், பி.ஏ., "ஸ்பெஷலைஸ்டு வித் கம்யூனிகேக்ஷன் இங்கிலீஷ்" என, குறிப்பிடப்பட்டிருந்தது. பாடப்பிரிவின் பெயர் இவ்வாறு மாற்றி குறிப்படப்பட்டிருந்ததால், உயர்கல்வி பயில சேர்ந்த கல்லூரிகளில், இந்த சான்றிதழை, பி.ஏ., இங்கிலீஷ் என ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். "ஏற்கனவே பயின்ற கல்லூரியில் இருந்து, இந்த பாடப்பிரிவுக்கு அங்கீகார சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே உயர்கல்வியை தொடர முடியும்," என, அக்கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துவிட்டன. மாணவிகள் நேற்று காலை திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர் ஜெஸின் பிரான்ஸிஸை சந்தித்து முறையிட்டனர். ஆனால், அங்கீகார கடிதம் பல்கலையில் தான் பெற வேண்டும் என தெரிவித்துவிட்டார். அதிர்ச்சியடைந்த மாணவிகள் கல்லூரியை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கோட்டை போலீஸார், மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பாரதிதாசன் பல்கலை பதிவாளருடன் பேசி அங்கீகார கடிதம் பெற நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவிகள் சமரசமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்