விவசாயத்தில் புதுமை: தமிழ்நாடு வேளாண் பல்கலை முயற்சி!
நம் நாட்டிற்கு உகந்த வகையில் புதுமையையும், தொழில்நுட்பத்தையும் புகுத்தி வருகிறது. இதுகுறித்து கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை துணைவேந்தர் ராமசாமி அளித்த பேட்டி:அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சர்க்கரை கிழங்கு (சுகர் பீட்), அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இவை இந்திய தட்பவெப்ப நிலையில் வளருவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தட்பவெப்ப நிலையிலும் சர்க்கரை கிழங்கு பயிரிடலாம் என ஆராய்ச்சி முடிவில் தெரியவந்தது. இதற்கான அனைத்து தொழில்நுட்பமும் தயார் நிலையில் உள்ளது. இந்த கிழங்கை ஒரு ஏக்கரில் பயிரிட்டால், 40 டன் விளைச்சல் கிடைக்கும். இந்த கிழங்கில் சர்க்கரை அளவு 12 முதல் 14 சதவீதம் வரை இருக்கும். கரும்பில் 11 முதல் 12 சதவீதம் வரை மட்டுமே இருக்கும். சர்க்கரை கிழங்கு பயிரிட்ட ஐந்தரை மாதத்தில் அறுவடை செய்யலாம். இந்த கிழங்கில் இருந்து சர்க்கரை எடுக்கலாம். அல்லது எத்தனால் என்ற உயிர் எரிபொருள் எடுக்கலாம். இக்கிழங்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகக்குறைந்த அளவே பயிரிடப்பட்டு வருகிறது. இந்த கிழங்கில் இருந்து இரு பொருட்கள் எடுக்கலாம் என்பது பலரும் அறியாதது. கரும்பு கிடைக்காத பட்சத்தில், சர்க்கரை கிழங்கில் இருந்து தேவையான சர்க்கரையை ஆலைகள் எடுத்துக் கொள்ள முடியும். தற்போது பல்கலை கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தை ஆராய்ந்து, அரசு கொள்கை முடிவு செய்த பின்பே, வணிக ரீதியாக விவசாயிகளைச் தொழில்நுட்பம் சென்றடையும். தானியங்கி வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் உள்ள 385 வேளாண் விரிவாக்க மையங்களில் தலா ஒரு தானியங்கி வானிலை ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான முழு தொழில்நுட்பத்தையும் பல்கலை அளிக்கும். ஒவ்வொரு மையத்திலும் அப்பகுதியிலுள்ள வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் உள்ளிட்டவை கணக்கிடப்பட்டு, பல்கலை வளாகத்திலுள்ள வேளாண் வானிலை காலநிலை ஆய்வு மையத்துக்கு தினமும் அனுப்பி வைக்கப்படும். இவற்றை ஆராயும் பல்கலை விஞ்ஞானிகள், ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள வானிலைக்கேற்ப, பயிர்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை அளிக்கப்படும். கோல்டன் ரைஸ்: ஜெர்மனி விஞ்ஞானிகள் கோல்டன் ரைஸ் என்ற தங்க நிறத்திலான அரிசியைக் கண்டறிந்தனர். இந்த அரிசியை இந்தியாவிலுள்ள தட்ப வெப்ப நிலைக்கேற்ப வளர்ப்பது தொடர்பான ஆராய்ச்சி, வேளாண் பல்கலை, டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கல்வி மையத்திலும் நடந்து வருகிறது. கோவை வேளாண் பல்கலையில் ஏ.எஸ்.டி., 16 ரக நெல்லில், மரபணுக்களை புகுத்தி வெற்றிகரமாக ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசியில் பீட்டா கெரோட்டீன் என்ற நிறமி இருப்பதால், அவை வெள்ளை நிறத்துக்குப் பதில், தங்கத்தின் நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில் ‘வைட்டமின் ஏ’ அதிகளவில் இருக்கும். இதுதொடர்பான ஆராய்ச்சி முடிந்து, மத்திய அரசின் அனுமதிக்காக பல்கலை காத்துக் கொண்டிருக்கிறது. உயிரி பூச்சிக் கொல்லி: வயல் வெளியில் சில பயிர்களில் மட்டும் பூச்சித் தாக்குதல் அதிகம் உள்ளது. இதுபோன்ற தீமை பயக்கும் பூச்சிகளை, அதே இனத்தைச் சேர்ந்த நன்மை பயக்கும் பூச்சிகள் கொண்டு அழிக்க முடியும். இதற்கான ஆய்வு, கரும்பு, பருத்தி, நெல், காய்கறிகளில் நடந்து வருகிறது. இவ்வாறு துணைவேந்தர் ராமசாமி கூறினார்.