உள்ளூர் செய்திகள்

நடைப்பிரிவு போட்டியில் சாதனை படைக்கும் மாணவர் சபரிஷ்

காளப்பட்டி என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியின், பி.எஸ்.சி., இரண்டாமாண்டு மாணவர் சபரிஷ். கோவை புனித மைக்கேல் மேல்நிலை பள்ளியில் படிக்கும்போது, 1,500 மீ., 800 மீ., ஓட்டங்களில் பதக்கங்களை பெற்றுள்ளார். ராணுவத்தில் பணிபுரியும் சூரஜ், நேரு ஸ்டேடியத்தில் பல பேருக்கு பயிற்சியளிக்கும்போது, சபரிஷ் அவரது கண்ணில் பட்டுவிட, ஓடியது போதும்; இனிமேல் நடந்தாலே உனக்கு தங்கம் தான் என ஊக்கமளித்தார். உடனே தினமும் காலை - மாலை நடைபயிற்சியில் ஈடுபட்டார். அதன் பலனாக கடந்தாண்டு, திருவண்ணாமலையில் நடந்த மாநில ஜூனியர் தடகள போட்டி, 10 கி.மீ., நடைபிரிவில் முதலிடத்தில் வெற்றி மட்டுமின்றி, புதிய சாதனையும் படைத்தார். பின், மதுரையில் நடந்த ஜூனியர் தென்மண்டல (தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா) தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்தாண்டு மே மாதம் கோவையில் நடந்த மாநில சீனியர் தடகள போட்டியில், 20 கி.மீ., நடை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதை பெரிய வெற்றியாக கருதுகிறார். முன்னதாக, சென்னையில் நடந்த தேசிய தடகள போட்டி வயது வரம்பின்றி, (ஓபன்) 10 கி.மீ., பிரிவில் பங்கேற்ற சபரிஷ் ஏழாவது இடமே பெற்றார். ஜூலை முதல் வாரத்தில், ஈரோடு பெருந்துறையில் 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான தடகள போட்டி நடந்தது. இதில், 20 வயது பிரிவுக்கான, 10 கி.மீ., நடை போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார். தொடர்ந்து நடந்தே தங்க பதக்கம் வென்று வரும் சபரிஷ், அக்டோபரில் நடக்கவுள்ள பாரதியார் பல்கலை அனைத்து கல்லுாரிகளுக்கான போட்டியில் சாதனை புரிய தற்போதிலிருந்தே தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும், "2020ல் ஜப்பானில் நடக்கப்போகும் ஒலிம்பிக் பந்தயத்தில், இந்தியா சார்பில் பங்கேற்று வெற்றி பெறவேண்டும் என்பது எனக்கு நானே எடுத்த சவாலாக உள்ளது" என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்