மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்: ஆர்வம் காட்டாத தலைமை ஆசிரியர்
கோபிசெட்டிபாளையம்: மாற்றுத்திறன் குழந்தைகளின் மருத்துவ முகாமுக்கு ஆர்வம் காட்டாத அரசு நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். எஸ்.எஸ்.ஏ. சார்பில் பள்ளி வயது இயலாக் குழந்தைகள் அனைவரையும் ஒருங்கிணைந்து ஈரோடு மாவட்ட அளவில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி கோபி வட்டார வளமையம் சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் பெற்று பயனடைந்தனர். முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு, குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டை வழங்க தேர்வு செய்தனர். முகாமுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் லதா செய்திருந்தார். முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் அமரவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கு பள்ளி மூலம் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பல பெற்றோரை பள்ளியில் உள்ளவர்கள் கடிந்ததால், பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர். தவிர செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள், மருத்துவ முகாம் குறித்த விபரம் அறிய தலைமை ஆசிரியரை சந்தித்தனர். உடன் தலைமை ஆசிரியர் கந்தசாமி, "இந்த முகாமுக்கும் எங்களுக்கும், பள்ளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் நாங்கள் ஆர்வம் காட்ட மாட்டோம். உங்கள் யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. இங்கு எதற்கு வந்தீர்கள்" என்றதும் நிருபர்கள் வெளியேறினர்.