பழமையான பள்ளி கட்டடங்கள்: அச்சத்துடன் பயிலும் மாணவர்கள்
மஞ்சூர்: மஞ்சூரில் உள்ள பழமையான பள்ளி கட்டடங்களில் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில அரசு ஆரம்பப் பள்ளி கட்டடங்கள், சில அங்கன்வாடி மையங்கள் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மஞ்சூர் அருகே எடக்காடு பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கட்டடத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. மேற்கூரை உடைந்த நிலையில் மழை காலத்தில் மழை நீர் ஒழுகுவதால் அங்கு வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. "இங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர். அதேபோல் மஞ்சூர் அடுத்துள்ள பிக்கட்டியில் செயல்பட்டு வரும் பிக்கட்டி அரசு ஆரம்பப் பள்ளி கட்டடத்தில் சில இடங்கள் பெயர்ந்து சிதிலமடைந்து இருப்பதால், மாணவர்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே மாவட்ட கல்வித்து துறை அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள பழமையான பள்ளிகள், அங்கன் வாடிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.