ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
திருக்கனுார்: காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடக் கோரி, அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மொத்தம் 8 ஆசிரியர் பணியிடம் உள்ள இப்பள்ளியில், தற்போது 4 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, மாணவர்களும், அப்பகுதி பொதுமக்களும், அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பிடக் கோரி, நேற்று காலை 8.00 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், மண்ணாடிப்பட்டு மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் விபல்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வித்துறை அதிகாரிகளுடன் பேசி, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.