உள்ளூர் செய்திகள்

தொழிலை தேர்வு செய்வதில் அதிக கவனமாக இருக்கணும்

திருப்பூர்: சிறந்த தொழிலை தேர்வு செய்வதில், அதிக கவனமாக இருக்க வேண்டும், என, சேலம் ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் நிறுவன முதன்மை செயல் அலுவலர் ரவிச்சந்தர் அறிவுறுத்தினார். திருப்பூர் ஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த, தொழில்துறை அறிமுக கூட்டத்தில், அவர் பேசியதாவது: மத்திய மற்றும் மாநில அரசுகள், தொழில்துறையில் கட்டுமானம் சார்ந்த பணிகளுக்கு, அதிக முக்கியத்துவம் தந்து, பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை அறிவித்துள்ளன. ஸ்டீல், சிமென்ட் போன்ற கட்டுமான பொருட்களுக்கு, அதிகமான தேவை உள்ளது. பல ஆயிரம் கி.மீ., நீளத்தில் ரோடு, உயர்மட்ட பாலங்கள், ரயில் தண்டவாளங்கள், கப்பல், கார் தயாரிப்புக்கு ஸ்டீல் தேவையாக இருக்கிறது. கட்டுமான பொருட்கள் உற்பத்தி மற்றும் தயாரிப்பு, அதுசார்ந்த ஆய்வு மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில், அதிகமான வாய்ப்புகள் உள்ளன. படிக்கும்போது, மாணவர்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்கின்றனரோ, அதற்கேற்ப வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. 35 முதல், 40 ஆண்டு கால தொழில் வாழ்க்கையை இப்போதே, மாணவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். படித்துவிட்டு ஏதாவது ஒரு வேலை, மாத சம்பளம், மனைவி, குழந்தைகள், பணியில் ஓய்வு என, சாதாரண முறையில் வாழ்க்கை அமைத்துக் கொள்ளாமல், உயர்ந்த லட்சியத்தை கொண்ட வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும். பணியில் கிடைக்கும் திருப்தி, சமுதாயத்தில் கிடைக்கும் மதிப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றம், நிறுவனம் தரும் அங்கீகாரம் என, சிறந்த தொழிலை தேர்வு செய்வதில், மாணவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கல்லூரி முதன்மை செயல் அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். நிறுவன உறவுகள் இயக்குனர் சேதுராம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சரவணன் முன்னிலை வகித்தார். இயந்திரவியல், மின்னணு மற்றும் மின்நுட்பவியல் துறை சார்ந்த பேராசிரியர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றனர். செயல் அலுவலர் வனிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்