சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வையுங்கள்;ஜெ., கடிதம்
சென்னை: சிவில் சர்வீஸ் தேர்வை, இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.பிரதமருக்கு, நேற்று முன்தினம், முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை, தமிழக செய்தித்துறை, நேற்று வெளியிட்டது.அதில் கூறியிருப்பதாவது:தமிழக வெள்ள பாதிப்புக்களை தனிப்பட்ட முறையில் நீங்களே அறிவீர்கள். வெள்ள பாதிப்புகளால் பல இடையூறுகள் ஏற்பட்டன. மின் வினியோகமும் பாதிப்படைந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இன்று 14ம் தேதி தான், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.வெள்ள பாதிப்பால், தமிழகத்தில், இம்மாதம் நடக்க இருந்த பள்ளி, பல்கலை தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின், சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள், டிச., 18 முதல், 23ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் இருந்து, ஏராளமான மாணவர்கள் சென்னை வந்து, தேர்வுக்காக, விடுதிகளிலும், வாடகை கட்டடங்களிலும் தங்கி படித்து வந்தனர்.வெள்ளத்தால், சில வாரங்களாக, அவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தேர்வை வைத்தால், அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். தமிழக மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.தேதி மாற்றம் தேவையா?தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகள் பேரிடர் காலங்களில் தள்ளிவைக்கப்பட்டதில்லை என, சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி நிறுவன நிர்வாகிகள் கூறினர்.அவர்கள் கூறியதாவது:சிவில் சர்வீஸ் தேர்வு, ஒரு ஆண்டுக்கு முன், தேதியை அறிவித்து நடக்க கூடியது. இந்த தேர்வை எழுதுவோர், பல ஆண்டுகளாக, பயிற்சி செய்து தயாராகி கொண்டிருப்பர். தேசிய அளவில் நடக்கும் இந்த தேர்வை, பேரிடர் காலங்களில் தள்ளி வைத்ததற்கான முன்னுதாரணம் இல்லை. இந்த தேர்வை, அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், தேசிய அளவில் அணுகுவதே நல்லது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.