உள்ளூர் செய்திகள்

விடைத்தாள் திருத்தும் மையத்தில் அடிப்படை வசதி குறைவு!

தேனி: கூடலுாரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் வசதி குறைவால் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உத்தமபாளையம் கல்வி மாவட்டம் கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 5ம்தேதி முதல் 15ம்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணிவரை 300 முதல் 400 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணி மைய கட்டடத்தில் முதல் தளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஹாலில் மின் விசிறி, குடிநீர் வசதி போன்றவை போதுமான அளவில் இல்லை. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மின் விசிறி இல்லாததால் ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அவர்கள் கூறுகையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தால் கல்வி துறை அதிகாரிகள் ஆதரவு தேவை என்ற மன நிலையில், அதிகாரிகள் கூறும் அடிப்படை வசதியினை செய்து தருவார்கள். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இப் பணி நடந்தால் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் கூட செய்வதில் ஆர்வம் செலுத்துவது இல்லை. இந்த சூழ்நிலைதான் கூடலுார் மையத்திலும் நிலவுகிறது. மாவட்ட எல்லையோரம் உள்ள பள்ளியில் மையம் அமைத்துள்ளதால் போக்குவரத்து வசதி போதுமான இல்லை. எனவே, மாவட்ட தலைநகரிலோ அல்லது போக்குவரத்து வசதி அதிகம் உள்ள ஊர்களில் மையம் அமைத்தால் ஆசிரியர்கள் சிரமம் இருக்காது. எனவே, வரும் ஆண்டுகளில் விடைத்தாள் திருத்தும் மையம் தேனி அல்லது போடியில் அமைக்க வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்