உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம்
புதுச்சேரி: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் அளிக்க கவர்னர் தமிழிசை அனுமதி அளித்துள்ளார்.கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், தலைமை செயலாளர் மற்றும் ஆலோசகர்களுடன், அரசு உதவி பெறும் பள்ளி களுக்கு வழங்கும் நிதியுதவி குறித்து ஆலோசனை நடத்தினார். புதுச்சேரியில் பள்ளி கல்வி சட்டம், விதிகளை ஆராய குழு அமைத்துள்ளதாக கூறினர்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் கடந்த 14 மாதங்களாக வழங்கவில்லை. அதற்கு விரைவில் தீர்வு ஏற்படுத்துவதற்கான குழுவின் வரைவு அறிக்கை கவர்னர் ஆணைப்படி சமர்ப்பிக்கப்பட்டது.நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தை வரையறைப்படி உதவிபெறும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க கவர்னர் அனுமதி அளித்தார்.அரசு உதவி பெறும் பள்ளி சிறப்பாகவும், பொறுப்புணர்வுடன் செயல்பட குழுவின் வரைவு அறிக்கையில் தேவையான சட்டதிருத்தங்களை கொண்டு வரவும், மறு ஆய்வு செய்யவும் அனுமதி அளித்துள்ளார். தேர்தல் முடிந்தவுடன், இந்த குழுவின் அறிக்கை அரசின் இறுதி முடிவுக்கு சமர்ப்பிக்கப்படும்.