பள்ளிகளில் கல்வித்தரம்: மாதமிருமுறை கூட்டம் நடத்த உத்தரவு
தமிழக பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்த கிராம கல்விக்குழுக்களுக்கான கூட்டம், குறுவள மையங்களில் நேற்று நடத்தப்பட்டது.இதில் கல்விக்குழுக்களின் செயல்பாட்டு முறைகள் தொடர்பாக, கிராம கல்விக்குழு பயிற்சி கட்டகம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. இதில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் நோக்கம், கிராம கல்விக்குழுக்களின் செயல்பாடு, பொறுப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மேலும் கற்பித்தல் உபகரணங்கள், பள்ளி, கட்டட பராமரிப்பிற்கான போன்றவற்றிற்கான மானியங்கள் பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.இக்குழுக்களின் செயல்பாடுகளில் முக்கிய அம்சமாக, மாதமிருமுறை கூட்டம் நடத்த வேண்டும். மாதத்தின் இரண்டாவது, நான்காவது வியாழக்கிழமைகளில் இக்கூட்டம் நடத்தி, பள்ளி வளர்ச்சிக்கு தேவையான அம்சங்கள், நிலவும் நடைமுறை பிரச்னைகள், இவற்றை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.கூட்ட துவக்கம், தலைவர், செயலர் உரைகள், குழு கலந்தாய்வு உள்பட கூட்டம் நடத்தும் முறைகள் தொடர்பாக, முதல் கூட்டத்திற்கான எட்டு நிலைகளும், இரண்டாவது கூட்டத்திற்கான ஏழு நிலைகளும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.இது தவிர வருகை, தீர்மானங்கள், வங்கி கணக்கு புத்தகம், காசோலை வழங்கல், ரொக்க புத்தகம், செயல்பாடு வாரியான பேரேடு, இருப்பு பதிவேடு உள்பட எட்டு பதிவேடுகள் அவசியம் பராமரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு கிராம கல்விக்குழுக்களின் செயல்பாட்டு முறைகள் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.