உள்ளூர் செய்திகள்

தினமலர் ஊக்கத்தில் பெண்கள் முன்னுக்கு வந்துள்ளனர்: பொன்முடி

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வில் வெற்றி பெற தினமலர் சார்பில் ஜெயித்துக் காட்டுவோர் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.விழுப்புரத்தில் நேற்று நடந்த, நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சிக்கு, தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். தினமலர் பத்திரிகையில் நிறையையும், குறையையும் எழுதுவது வாடிக்கை. குறையை விசாரித்து எழுதுங்கள். பெற்றோர்கள் ஊக்கப்படுத்தினால், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவது உளவியல் ரீதியான உண்மை. மாணவர்களை ஊக்கப்படுத்த, உற்சாகப்படுத்தவே இந்த நிகழ்ச்சி. உங்களுக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 2 திருப்பு முனையாகவும், கல்வியை நிர்ணயிக்கும் ஒன்றாகவும் உள்ளது. தினமலர் போன்ற பத்திரிகைகள் கொடுக்கும் ஊக்கத்தில் பெண்கள் முன்னுக்கு வந்துள்ளனர். ஆண்களும் படிக்கத் துவங்கினால் சாதிப்பர்.தற்போது ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என மூன்று பாடத்திட்டங்கள் உள்ளது. இதை ஒரே பாடத் திட்டமாக மாற்றுவதே சமச்சீர் கல்வி திட்டம். நியாயமான திட்டத்திற்கும் பல கருத்துகள் வருகிறது. கல்வியாளர்களின் கருத்துக்கள் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். தினமலர் இதழில், இன்று கூட சமச்சீர் கல்வி பற்றி கருத்து எழுதியுள்ளனர். மூன்று திட்டமாக இருந்ததை ஒரே திட்டமாக மாற்றியதற்கு நன்றி தெரிவித்துவிட்டு, கருத்தை சொல்லியிருக்கலாம். தமிழ் வழியில் படிப்பதை கூறியிருக்கும் கருத்தை வரவேற்கிறேன்.சமச்சீர் கல்வி பற்றி, பெற்றோர் மனம் மாற வேண்டும்.இதற்கு, தினமலர் கருத்து எழுத வேண்டும். மாணவர்கள் இப்போதுள்ள மனப்பாட வழியில் நன்கு படித்து வெற்றி பெற வேண்டும். இதற்கு, தினமலர் முதல் வழிகாட்டியாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்