உள்ளூர் செய்திகள்

எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?

அதன் சாதக, பாதகங்கள் குறித்து சொல்லுமாறு, கருத்து சொல்லலாம் வாங்க என்ற தலைப்பில், தினமலர் நாளிதழ் அறிவிப்பு வெளியிட்டது.   கல்வித்துறை அறிஞர்கள், வல்லுனர்கள், கல்வித் துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர்கள், வாசகர்கள் என, பல தரப்பினரும், தங்கள் கருத்துக்களையும், அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், பக்கம், பக்கமாக அனுப்பி வருகின்றனர். கட்டுரைகள், தொடர்ந்து வரவேற்கப்படுகின்றன. சிறந்த கட்டுரைகளுக்கு, முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஏழு பேருக்கு ஆறுதல் பரிசுகளும் உண்டு. ஒரே வாரத்தில் குவிந்துள்ள ஏராளமான கட்டுரைகளைப் படித்து, அலசி ஆராய்ந்ததில், ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு உபயோகமான கருத்தைக் கொண்டுள்ளது தெரிந்தது. இவற்றில் பல, அரசின் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டியவையாகக் கருதப்படுவதால், அவை ஒவ்வொன்றையும், தினமலர் நாளிதழில் வெளியிட, முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் சில... முதல் வகுப்பில் கணினி தேவை கல்வித் திட்டம் என்பது, கற்றலின் இனிமையை விரிவாக எடுத்துரைப்பதாகவும், கற்றோருக்கு இருக்கும் சிறப்பை, தெள்ளத் தெளிந்த நீரோடையில் செல்லும் நீரை அனைவரும் அறிவது போல், உணர்த்துவதாகவும் இருத்தல் வேண்டும். தொழிலாளர்களை உருவாக்குவதை விட, நல்ல தொழில்முனைவோரை நாட்டிற்கு அளிக்க வேண்டும். நம்முடைய கல்வித் திட்டதால், ஆயிரம் விவேகானந்தரையோ, அன்னை தெரசாவையோ, அப்துல் கலாமையோ, அம்பானி சகோதரர்களையோ, லட்சுமி மிட்டலையோ உருவாக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒருவரையாவது நாட்டிற்கு நல்கிட வேண்டும். நீர் ஆதாரங்களை போற்றிப் பாதுகாப்பதாக, விவசாயத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதாகவும், மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் நடுதல் போன்றவற்றை, மனதில் ஆழப்பதிவதாக இருத்தல் வேண்டும். புவி வெப்பமயமாதல், பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள், இயற்கை விவசாயம் போன்றவற்றை விரிவாக விளக்கிக் கூறுவதாய் அமைதல் வேண்டும்.   நடைமுறை அலுவல்கள் அனைத்தையுமே, பாடத் திட்டத்தில் செய்முறையுடன் கூடிய விளக்கத்துடன் இருத்தல் வேண்டும். தற்காப்பு கலையை போதிப்பதாயும், தன்னிடம் மறைந்து கிடக்கும் திறமையை வெளிக் கொணர்வதாய் இருக்க வேண்டும். அனைத்து மாணவ, மாணவியரையும் நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் இயக்கம், தேசிய பாதுகாப்புப் படை, செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றில் ஈடுபடுத்துவதாய் அமைதல் வேண்டும்.   கணினியை முதல் வகுப்பிலேயே அறிமுகம் செய்தல் வேண்டும். இந்தி, பிரெஞ்ச், ஜெர்மன், சீன மொழியையும் சேர்க்கலாம். மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, தாய் - தந்தை, தாய்நாடு போன்றவர்களை போற்றி பேணி பாதுகாப்பதாய் கல்வி அமைதல் வேண்டும்.- மு.மாரிமுத்து, விரிவுரையாளர், கோவை. சுயதொழில் பாடம் மிகவும் அவசியம்பண்பையும், கலாசாரத்தையும் உணர்த்தி, நாட்டின் சீர்குலைவை தகர்த்து, ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகளை சமப்படுத்தக் கூடியதாக கல்வி இருக்க வேண்டும். அடிப்படை கல்வியில், தமிழ் இலக்கணத்தை ஒரு துளியாவது கற்றுத்தர வேண்டும். இலக்கணம் இல்லாமல் தமிழ் இல்லை என்பதை, சமச்சீர் கல்வி கற்றுத்தர வேண்டும்.பொது அறிவு நூல், வங்கி சம்பந்தமான பாடம், வாழ்க்கை, கடல், விண்வெளி, இன்றைய அரசியல், சுற்றுச்சூழல், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் போன்றவை குறித்த பாடங்கள், சமச்சீர் கல்வியில் இடம்பெற வேண்டும். வங்கி, தபால் நிலையத்தின் கடமை, பொறுப்பு, செயல்பாடு குறித்து, வாழ்க்கை சம்பந்தமான பாடமாகவும், தன்னம்பிக்கை, சுய சிந்தனை அதிகரிக்க செய்யும் வகையில் கதை, கட்டுரையை வாழ்வியல் சம்பந்தமான பாடமாகவும் சேர்க்க வேண்டும்.சுயதொழில் சம்பந்தமான பாடம் மிகவும் அவசியம். நாட்டின் இயற்கை வளம், செயற்கை வளம் எவையெவை என, மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை கல்வியிலிருந்தே இசை, விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் மனதை மாற்ற செய்யலாம்.- ப.வைரமணி, விருதுநகர். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் கல்வி சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்களுக்கு எளிதில் மனதில் பதியும் படியாகவும், உயர்கல்வி கற்பதற்கு உதவும் வகையிலும், நாட்டின் எந்த பகுதியிலும், வேலை வாய்ப்பிற்காக செல்லும் போது உதவும் வகையிலும் இருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவின்படி, இந்தியா வல்லரசு நாடாக மாற சமச்சீர் கல்வித்திட்டம் அமைய வேண்டும்.அயல்நாடுகளைப் போல, சமச்சீர் கல்வித் திட்டத்தில் மனனம் செய்வதை குறைத்து, வாழ்க்கையின் பயனுள்ள கருத்துக்களை இடம்பெற செய்ய வேண்டும். மாணவர்கள் பாடத்திட்டத்தை வாழ்க்கை நெறிகளுக்கு ஒப்பிட்டு, அதை கற்க சமச்சீர் கல்வித்திட்டம் இருக்க வேண்டும். அறிவியல் பாடத்திட்டத்தில் வினாக்களை மிகவும் குறைத்து, அறிவியலின் கூற்றை மாணவர்கள் நன்கு படித்து புரிந்து கொள்ளும் வகையில், பாடத்திட்டம் அமைய வேண்டும். அறிவியலின் செயல்திறன் அதிகளவில் அமைய வேண்டும். இத்திட்டத்தில் மிகவும் முதன்மையாக, முக்கியமாக, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டின் வகைகள், பயங்கரவாதத்திற்கு எதிரான மனப்பான்மை ஏற்படுத்தும் தகவல், அதிகளவில் இடம்பெற வேண்டும்.- எம்.பி.ராஜேஸ்வரி, பள்ளி ஆசிரியை, புஞ்சை புளியம்பட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்