உயர் கல்வி பாடத்திட்டங்களில் மாநில மொழிக்கு முன்னுரிமை
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி, அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், மாநில மொழிகளுக்கும், தாய்மொழிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இந்நிலையில், பாடத்திட்டங்களிலும் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது கட்டாயம் என, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும், யு.ஜி.சி., செயலர் மனீஷ் ஜோஷி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேசியக் கல்விக் கொள்கை 2020ன் படி, கல்வி, கலை, கலாசாரம், அறிவியல் போன்றவற்றில், இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இதை அமல்படுத்த, பல்கலைகளும், கல்லுாரிகளும் தங்கள் பாடத்திட்டங்களில், இந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள், கிரெடிட் மதிப்பெண்ணுக்கான விருப்ப பாடப்பிரிவுகளில், குறைந்த பட்சம் ஐந்து சதவீதமாவது, தாய்மொழி சார்ந்த பாடப் பிரிவுகளை தேர்வு செய்ய, கல்லுாரிகள் பரிந்துரைக்க வேண்டும்.மாநில மொழிகளில், பாடப் புத்தகம், பாடத்திட்ட கையேடுகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும். பட்டப்படிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு, மாநில மொழி பாடங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். அறிவியல், மருத்துவம், தொழில்நுட்ப புத்தகங்களை, மாநில மொழிகளில் உருவாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.