உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு: கட்-ஆப் உயர வாய்ப்பு

நீட் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தமிழக மாணவர் பிரபஞ்சன் தேசியளவில் முதலிடம் பிடித்தார். தமிழக மாணவர்களின் மதிப்பெண் விகிதம், கடந்தாண்டை ஒப்பிடுகையில் இருமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக 720க்கு 650 மதிப்பெண்களுக்கு மேல் கடந்தாண்டு 199 மாணவர்களே பெற்ற நிலையில், தற்போது 386 பேர் இடம் பிடித்துள்ளனர். 500 மதிப்பெண்ணுக்கு மேல், கடந்தாண்டு 4,470 பேர் பெற்ற நிலையில், நடப்பாண்டில் 6,401 பேர் பட்டியலில் உள்ளனர். இதனால், கட்-ஆப் மதிப்பெண்ணும் உயரும் என்பது, கல்வியாளர்களின் கணிப்பாக உள்ளது.கடந்தாண்டு பொதுபிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 581 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல் பி.சி., பிரிவினர்- 529, பி.சி.எம்- 504, எம்.பி.சி.,/ டி.என்.சி.,- 496, எஸ்.சி.,- 407, எஸ்.சி.ஏ- 355 மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு 311 மதிப்பெண்கள் கட்-ஆப் ஆக இருந்தது. ஆனால் கடந்தாண்டை விட தற்போது ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 மதிப்பெண்கள் கூடுதலாக கட்-ஆப் நிர்ணயிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்குள் செல்ல முன்வருவதில்லை. ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தி கொள்வது அவர்களின் எதிர்காலத்தில் சிறப்பானதாக அமையும். கடந்தாண்டு 620 மதிப்பெண் பெற்றவர்களுக்கு தேசிய மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்தது. இது தற்போது 630 ஆக உயரும். தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லுாரிகளை தேர்வு செய்ய முன்வருவது போல வெளிமாநில கல்லுாரிகளிலும் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.தமிழகத்தில் 38 அரசு மருத்துவ கல்லுாரிகளில் 5,225 இடங்கள் உள்ளன. முன்பு இதற்கு விண்ணப்பிக்க, போதிய விழிப்புணர்வு இல்லை. ஆனால் தற்போது நீட் தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டுமென்ற புரிதல் உள்ளதால் அதிக மதிப்பெண் பெறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் ஏறுமுகத்தில் தான் இருக்கும் என மருத்துவ கல்வி இயக்குனரக முன்னாள் இயக்குனர் எட்வின்ஜோ தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்