உள்ளூர் செய்திகள்

நர்சிங் பணி மட்டும் கொடுங்கள்: செவிலியர்கள் போராட்டம்

சென்னை: நர்சிங் பணியை விட, கணினி இயக்கும் பணிகள் அதிகமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக கிராமங்களில் தாய் - சேய், மக்கள் நலனை பாதுகாக்கும் பணிகளில், கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு நர்சிங் பணியை விட, கணினி இயக்கும் பணிகள் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மாநிலம் முழுதும் பணியில் இருந்த செவிலியர்கள், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.இதுகுறித்து, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க தலைவர் பரமேஸ்வரி கூறியதாவது:தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், கூடுதல் பணிச்சுமையில் பணியாற்றி வருகிறோம். தற்போது, குழந்தைகள், கர்ப்பிணியர் போன்றவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து, யூ - வின் செயலியில் பதிவேற்ற எங்களை தான் பயன்படுத்துகின்றனர். அதற்கென்று தனியாக, டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் நியமிக்காமல், எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். எங்களுக்கு நர்சிங் பணியை மட்டும் வழங்க வலியுறுத்தி, நேற்று முதல், 10ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற உள்ளோம். வரும் 10ம் தேதி அனைத்து சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்துக்கு முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தொடர்ந்து, 11ம் தேதி முதல், 18ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்