உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி பல்கலை பேராசிரியர் மீது சி.பி.ஐ., வழக்கு

சென்னை: மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ஊழல் செய்தது தொடர்பாக, புதுச்சேரி பல்கலை பேராசிரியர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.புதுச்சேரி பல்கலையில், மனித வள மேம்பாட்டு மையத்தின் பொறுப்பு இயக்குனராக, 2008 - 16 கால கட்டத்தில் பேராசிரியர் ஹரிஹரன் பணிபுரிந்தார். இவர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, புத்தாக்க பயிற்சி அளித்தது தொடர்பாக, போலி ரசீது வாயிலாக, செலவீன கணக்கு காட்டி, 2.25 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டார். பல்கலைக்கு, மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ஊழல் நடந்துள்ளது. ஹரிஹரனை காப்பாற்ற, அவரிடம் இருந்து, துணைவேந்தர் குர்மீத் சிங், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளார் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, சென்னை, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் இரண்டு புகார்கள் தரப்பட்டுள்ளன.மேலும், புதுச்சேரி மாநில ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி ஆனந்த் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சில தினங்களுக்கு முன், இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜரானார். அப்போது, ஊழல் தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தத்தின்படி, புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி, மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பல்கலை சார்பிலும், பேராசிரியருக்கு எதிரான புகார் குறித்து விசாரிக்க உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாக காரணம் கூறி கடிதம் எழுதி உள்ளனர் என கூறினார்.பின், நீதிபதி, ஊழல் புகாரில் சிக்கியவர்களை காப்பாற்ற முயற்சி செய்வதை ஏற்க முடியாது. துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள்வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம் என, உத்தரவிட்டார். இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையில் தீவிரம் காட்டினர். அப்போது, இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, பல்கலை நிதி பொறுப்பு அதிகாரி லாசர் என்பவர் தணிக்கை செய்து, அறிக்கை அளித்துள்ளார். அதில், ஹரிஹரன், 27 லட்சம் ரூபாய்க்கு போலி ரசீதுகள் தாக்கல்செய்து இருப்பதாக கூறியுள்ளார். மேலும், ஹரிஹரனிடம் துணைவேந்தர், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனினும், சி.பி.ஐ., அதிகாரிகள், தற்போது, ஹரிஹரன் மீது மட்டும், நம்பிக்கை மோசடி, தெரிந்தே போலி ஆவணங்களை தாக்கல் செய்தல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் துணை வேந்தர் பெயரை சேர்ப்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்