போக்குவரத்து பணியாளர் தேர்வு இணையதள சேவை முடக்கம்
சென்னை: ஒரே நேரத்தில், 60,000 பேர் விண்ணப்பிக்க முயன்றதால், போக்குவரத்து பணியாளர் தேர்வு இணையதளம் நேற்று, ஒரு மணி நேரம் முடங்கியது.அரசு போக்குவரத்து கழகங்களில், 2,000த்துக்கும் மேற்பட்ட டி.என்.சி., எனப்படும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உரிமம் வைத்துள்ளோரை, தேர்வு செய்யும் பணி நடக்கிறது. முதல்கட்டமாக, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு, 685 பேரை நியமிப்பதற்கான அறிவிப்பு, நேற்று முன்தினம் வெளியானது. அதன்படி, http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நேற்று மதியம், 1:00 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பதிவு துவங்கிய சில நிமிடங்களில், 60,000த்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க துவங்கியதால், சர்வரில் பிரச்னை ஏற்பட்டது. மதியம் 2:00 மணி வரை பிரச்னை இருந்தது.இது குறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:தொழில்நுட்ப பிரச்னை சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது. செப்., 18ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக உதவி பெற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.