கிராமங்களில் பாரத் நெட் திட்டம் செப்.,ல் துவக்கம்
பொள்ளாச்சி: பாரத் நெட் திட்டத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் இணைய தள சேவை, செப்., மாதம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.பாரத் நெட் என்பது, நமது நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும், பிராட்பேண்ட் இணைப்பு வழங்கும், மத்திய அரசின் திட்டம். தமிழகத்தில், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மின்னணு சேவை, இணைய வழி கல்வி, தொலை மருத்துவம், இணைய தள இணைப்பு மூலம் தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் இணைய வசதி வழங்கப்படும். இத்திட்டம், நகர்ப்புறம், கிராமப்புறங்களுக்கு இடையே, தகவல் தொழில்நுட்ப திறன் இடைவெளியை குறைக்க உதவும்.கோவை மாவட்டத்தில் உள்ள, 228 கிராம ஊராட்சிகளிலும் முழு வீச்சில் செயல்படுத்தப்படும். இச்சேவை வழங்கும் பணி, செப்., மாதம் துவங்க உள்ளது. மின் கம்பங்கள் வாயிலாக 85 சதவீதம், தரை வழியாக 15 சதவீதம், கண்ணாடி இழை இணைப்பு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கான ரேக், யு.பி.எஸ்., உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டடத்தில் நிறுவப்படுகின்றன.இந்த உபகரணங்கள் பொருத்தியுள்ள அறை, ஊராட்சி தலைவராலும் பொருட்கள் பாதுகாப்புக்கான பொறுப்பு, கிராம ஊராட்சி செயலராலும் நிர்வகிக்கப்படுகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள், இணையதள வசதி பெற முடியும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருடினால் வழக்கு; கலெக்டர் எச்சரிக்கைகலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், இணைய தள சேவையை ஒருங்கிணைக்கும் மையங்களில் பொருத்தியுள்ள மின் கலம், யு.பி.எஸ்., ரவுட்டர், ரேக் மற்றும் கண்ணாடி இழை போன்ற உபகரணங்கள் அரசின் உடமை. இவற்றை சேதப்படுத்தும் மற்றும் திருடும் நபர்கள் மீது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வாயிலாக, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.